அமெரிக்க அரசு துறையில் இருந்து விலகலா: எலான் மஸ்க் சூசகம்

3


வாஷிங்டன்: அமெரிக்க அரசின் செலவை குறைக்க அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.


உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் சி.இ.ஓ., 'எக்ஸ்' சமூக வலைதளத்தின் உரிமையாளர் என்ற பல பெருமை பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய தற்போதைய அதிபர் டிரம்ப்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பிரசாரம் செய்தார். இதனையடுத்து டிரம்ப் பதவியேற்றதும், சிறந்த நிர்வாகத்திற்கான துறை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். அவரின் பணி நாட்கள் 130 ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.


அரசின் செலவுகளை குறைக்கும் வகையில், வெளிநாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம், ஊழியர்களை குறைப்பது உள்ளிட்டவற்றில் எலான் மஸ்க்கின் பங்கும் உள்ளது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.


அரசின் தகவல்களை பெற்று, தனிப்பட்ட வணிக நலன்களுக்கு சாதகமாக எலான் மஸ்க் பயன்படுத்துவார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அவருக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது.


டெஸ்லா நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால், எலான் மஸ்க்கிற்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவின் பல மாகாணங்களில் டெஸ்லா நிறுவன விற்பனை நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ துவங்கி உள்ளது.


இந்நிலையில் அமெரிக்க ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் எலான் மஸ்க் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பிட்ட 130 காலக்கெடுவுக்குள் பணப்பற்றாக்குறையை குறைப்பதற்கு தேவையான எங்களது அனைத்து பணிகளையும் முடித்து விட்டோம். தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும், முறைகேடுகளைக் கண்டறிந்து நிறுத்துவதும் தான் எங்கள் முதல்நோக்கம். இதற்காகவே நாங்கள் வேலை செய்து வருகிறோம். எங்களின் நடவடிக்கையால் 4 பில்லியன் டாலர் சேமிக்க முடிகிறது. இதுவரை நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் வெற்றியைத் தருவதாகவே இருக்கிறது. எங்கள் நடவடிக்கை வெற்றி அடையாமல் போனால், அமெரிக்கா கடனில் மூழ்கி இருக்கும்.


இத்தனை நாட்கள் அமெரிக்க அரசு திறமையாகச் செயல்படவில்லை. தேவையற்ற செலவுகள் மற்றும் மோசடிகள் நிறைய இருந்தன. இதனால், எந்தவொரு முக்கியமான அரசு சேவைகளையும் பாதிக்காமல் 15 சதவீதம் வரை செலவைக் குறைக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம் . இந்த பணிகளை எல்லாம் முடித்துவிட்டு மே மாதம் நான் இந்த துறையில் இருந்து விலகலாம். இவ்வாறு எலான் மஸ்க் கூறினார்.

Advertisement