வீர தீர சூரன் படத்தை வெளியிட விதித்த தடையை நீக்கியது டில்லி ஐகோர்ட்

புதுடில்லி: நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்கள் இடைக்கால தடை விதித்து டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தடையை ஐகோர்ட் நீக்கி உள்ளது.

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் வீர தீர சூரன். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எச்.ஆர்., பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் B4U என்டெர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மதுரை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால், ஓ.டி.டி., உரிமம் விற்கப்படும் முன்பு ரிலீஸ் தேதியை வெளியிட்டதாக, எச்.ஆர்., பிக்சர்ஸ் நிறுவனம் மீது B4U என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், நேற்று இடைக்கால தடை விதித்தது. இதனால், இன்று காலை வெளியாக இருந்த படம் ரிலிஸாகவில்லை. இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வீர தீர சூரன் ரிலீஸ் விவகாரத்தில் உடனடியாக ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்ததுடன், 4 வாரங்களுக்கு படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இது விக்ரம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்,தயாரிப்பு நிறுவனம் சார்பில் டில்லி ஐகோர்ட்டில் பி4யூ நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுகத்தீர்வு எட்டப்பட்டதாககூறி முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சமரசம் தொடர்பாக இரு தரப்பும் இன்று மாலைக்குள் எழுத்துபூர்வ ஒப்பந்தத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, 'வீர தீர சூரன்' படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது.

Advertisement