சென்னை அணி மீண்டும் தோல்வி: ராஜஸ்தான் அணி முதல் வெற்றி

கவுகாத்தி: கடைசி ஓவரில் ஏமாற்றிய சென்னை அணி 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கேப்டன் ருதுராஜ் அரைசதம் வீணானது.
அசாமின் கவுகாத்தியில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (4) ஏமாற்றினார். அஷ்வின் வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த நிதிஷ் ராணா, கலீல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி, 21 பந்தில் அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 82 ரன் சேர்த்த போது நுார் அகமது 'சுழலில்' சஞ்சு சாம்சன் (20) சிக்கினார். அஷ்வின் வீசிய 12வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த நிதிஷ் (81 ரன், 5 சிக்சர், 10 பவுண்டரி), அடுத்த பந்தில் 'ஸ்டம்பிங்' ஆனார்.
துருவ் ஜுரெல் (3), வணிந்து ஹசரங்கா (4) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். நுார் அகமது வீசிய 17வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த கேப்டன் ரியான் பராக் (37), பதிரானா 'வேகத்தில்' போல்டானார். ஆர்ச்சர் (0), கார்த்திகேயா (1) நிலைக்கவில்லை. ஹெட்மயர் (19) ஆறுதல் தந்தார்.
ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. தீக் ஷனா (2), தேஷ்பாண்டே (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ரச்சின் ரவிந்திரா (0) ஏமாற்றினார். துஷார் தேஷ்பாண்டே வீசிய 4வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய ராகுல் திரிபாதி, ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். மறுமுனையில் அசத்திய கேப்டன் ருதுராஜ், சந்தீப் சர்மா வீசிய 6வது ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்த போது திரிபாதி (23) அவுட்டானார்.
ஹசரங்கா வீசிய 10வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஷிவம் துபே (18), அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் (9) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய ருதுராஜ், 37 பந்தில் அரைசதம் எட்டினார். இவர், 63 ரன்னில் அவுட்டானார். பின் ஜடேஜா, தோனி இணைந்து போராடினர். தேஷ்பாண்டே வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் தோனி.
கடைசி ஓவரில் சென்னையின் வெற்றிக்கு 20 ரன் தேவைப்பட்டன. சந்தீப் சர்மா பந்துவீசினார். முதல் பந்தில் தோனி (16) அவுட்டானார். அடுத்த இரண்டு பந்தில் ஒரு ரன் கிடைத்தது. நான்காவது பந்தை ஓவர்டன் சிக்சருக்கு அனுப்பினார். கடைசி 2 பந்தில், 4 ரன் கிடைத்தது. சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஜடேஜா (32), ஓவர்டன் (11) அவுட்டாகாமல் இருந்தனர். சமீபத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்த சென்னை அணி, தொடர்ந்து 2வது தோல்வியை பெற்றது. ஐதராபாத், கோல்கட்டாவிடம் தோற்ற ராஜஸ்தான் அணி, முதல் வெற்றியை பதிவு செய்தது.

மேலும்
-
நான் யோகி; அரசியல் எனது முழு நேர வேலையல்ல: சொல்கிறார் உ.பி., முதல்வர்
-
மானியம் விடுவிக்க ரூ.12 ஆயிரம் லஞ்சம்: நாகை மாவட்ட தொழில் மைய மேலாளர் கைது
-
சென்னை மெட்ரோவில் 92.10 லட்சம் பேர் பயணம்
-
சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா தாப்பா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு
-
ஆத்திரமூட்டும் முகமது யூனுஸ் அறிக்கை: தலைவர்கள் கண்டனம்
-
டில்லியில் நான்கு மாடி வணிக வளாகத்தில் தீ விபத்து: கார்கள் எரிந்து நாசம்