ஒடிசா சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி: காங்கிரசார் மீது தண்ணீர் பீய்ச்சி தடுத்த போலீசார்

புவனேஸ்வர்: ஒடிசா சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி போலீசார் தடுத்ததால் பதற்றம் ஏற்பட்டது.

சபாநாயகர் சுரமபாதி இந்த வார தொடக்கத்தில் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததற்காக, காங்கிரசை சேர்ந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தார்.



அதன் தொடர்ச்சியாக, ஒடிசாவில் இன்று, சட்டமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற காங்கிரஸ் தொண்டர்கள் தடுப்பு வேலிகளை தாண்டி, போலீசாருடன் மோதியதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்த போராட்டத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் நாற்காலிகளை வீசி போலீஸ் தடுப்புகளை உடைக்க முயற்சித்தனர். பாதுகாப்பு ஜாக்கெட்டுகள், தலைக்கவசங்கள் மற்றும் தடிகளுடன் போலீசார் நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து போராடியதால், கூட்டத்தைக் கலைக்க போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.

இந்த நிலையிலும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டங்களை தொடர்ந்தனர். முதலில் 12 எம்.எல்.ஏ.,க்களை தான் சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார்.தொடர்ச்சியான இடையூறுகள் மற்றும் ஒத்திவைப்புகளைத் தொடர்ந்து, சபாநாயகர் மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்தார்.

காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில்,
இந்த அடக்குமுறை ஜனநாயகத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Advertisement