தமிழகம் 2வது இடம்: 'கேலோ இந்தியா பாரா' விளையாட்டில்

புதுடில்லி: 'கேலோ இந்தியா பாரா' விளையாட்டில், 28 தங்கம் உட்பட 74 பதக்கம் வென்ற தமிழகம் 2வது இடம் பிடித்தது.

டில்லியில், மாற்றுத்திறனாளிகளுக்கான 'கேலோ இந்தியா பாரா' விளையாட்டு 2வது சீசன் நடந்தது. இதில் 1300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், 6 வகையான விளையாட்டுகளில் பங்கேற்றனர்.

கடைசி நாளில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் குஜராத் நட்சத்திரங்கள் ஆதிக்கம் செலுத்தினர். நான்கு தங்கம், 5 வெள்ளி, 12 வெண்கலம் என, 21 பதக்கங்களை கைப்பற்றினர். ஹரியானாவுக்கு 3 தங்கம் உட்பட 8 பதக்கம் கிடைத்தது.

முடிவில், 34 தங்கம், 39 வெள்ளி, 31 வெண்கலம் உட்பட 104 பதக்கங்களை அள்ளிய ஹரியானா, மீண்டும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதற்கு முன், 2023ல் நடந்த முதல் சீசனில் ஹரியானா முதலிடம் பிடித்திருந்தது. தமிழகம் 28 தங்கம், 19 வெள்ளி, 27 வெண்கலம் உட்பட 74 பதக்கங்களுடன் 2வது இடத்தை தட்டிச் சென்றது. உ.பி.,க்கு (23 தங்கம், 21 வெள்ளி, 20 வெண்கலம்) 3வது இடம் கிடைத்தது.

இம்முறை பவர்லிப்டிங்கில் 18, தடகளத்தில் 14 தேசிய சாதனை படைக்கப்பட்டன. இதில் 12 வீராங்கனைகள் தேசிய சாதனை படைத்தனர். தமிழகம் சார்பில் குஷ்பூ கில், என்பதமிழி, கீர்த்திகா, தேசிய சாதனை படைத்தனர்.
தவிர, 186 தங்கம், 189 வெள்ளி, 218 வெண்கலம் என, மொத்தம் 596 பதக்கம் வழங்கப்பட்டன. இதில் 346 பதக்கம் (110 தங்கம், 109 வெள்ளி, 127 வெண்கலம்) வீரர்களும், 250 பதக்கம் (79 தங்கம், 80 வெள்ளி, 91 வெண்கலம்) வீராங்கனைகளும் வென்றனர்.

Advertisement