ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டார சுகாதாரத் துறையின் கீழ், மானாம்பதி, களியாம்பூண்டி, படூர், சாலவாக்கம், குருமஞ்சேரி, உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன.

இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களை பயன்படுத்தி, சுற்றுவட்டார கிராமத்தினர் பல்வேறு மருத்துவ சேவைகளை பெற்று வந்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சையை மேம்படுத்த, போதிய உபகரணங்கள் இல்லாமல் இருந்தது.

இது குறித்து பொதுமக்கள் தரப்பிலும் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, மாநில திட்டக் குழு, கவனம் பெறும் வட்டார மேம்பாடு திட்டத்தின்கீழ், 95 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மானாம்பதியில் நேற்று நடந்தது.

வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில் முன்னிலை வகித்தார். உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, இ.சி.ஜி., ஹீமோகுளோபின் அளவீடு செய்யும் நவீன கருவி ஆகியவை உபகரணங்களை வழங்கினார். இதில், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Advertisement