காஷ்மீரில் என்கவுன்டர்: 3 போலீசார் வீரமரணம்

1

ஸ்ரீநகர்: காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 3 போலீசார் வீரமரணம் அடைந்த தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த கிராமத்தை சேர்ந்த சிலர், ராணுவ உடையில் வந்த சிலர் தங்களிடம் தண்ணீர் கேட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த நான்கு நாட்களாக அந்த பகுதியில் ராணுவம், தேசிய பாதுகாப்பு படையினர், பிஎஸ்எப் வீரர்கள், போலீஸ், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, பாதுகாப்பு படையினருக்கும் - பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை ஏற்பட்டது. இதில் 3 போலீசார் வீரமரணம் அடைந்தனர். பாதுகாப்பு படையைச் சேர்ந்த 5 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement