சத்தி சாலை விரிவாக்கம் 240 மரங்கள் அகற்றம்

கோபி: சத்தி சாலை விரிவாக்கத்துக்காக, பழமையான, 240 மரங்கள் வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே அக்கரை கொடிவேரி பிரிவு முதல், அரசூர் அருகே மூலக்கிணறு வரையிலான பிரதான சத்தி சாலையில், 6 கி.மீ., துாரத்துக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடக்கும் இப்பணியில், சாலையின் இருபுறமும் உள்ள, சவுடாள், ஆலமரம், துாங்குமூஞ்சி, புங்கன் என, 50 ஆண்டுகள் பழமையான, 240 மரங்களை வெட்டி அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 10 நாட்களாக மரம் வெட்டும் பணி நடந்து வருகிறது. மரங்களை துண்டு, துண்டாக வெட்டி, திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளின் எரிபொருள் உபயோகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று வரை, 95 சதவீத மரங்களை வெட்டி, 130 டன் மரத்துண்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர்.