ஒரு பிரியாணிக்கு ரூ.450 என கணக்கு காட்டுவதா? தங்கவயல் நகராட்சியில் காங்., கவுன்சிலர் வெளிநடப்பு!

தங்கவயல்:தங்கவயல் நகராட்சியின் செலவு விபரத்தை முறையாக தெரிவிக்காததால், காங்கிரஸ் கவுன்சிலர் ஜெயபால், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

தங்கவயல் நகராட்சி மாதாந்திர கூட்டம் நேற்று காலை, நகராட்சி தலைவர் இந்திரா காந்தி தலைமையில் நடந்தது. தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, துணைத்தலைவர் ஜெர்மன், நகராட்சி ஆணையர் பவன் குமார் உட்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

நகராட்சி ஆணையர்: பி.எம்.சாலை, கிருஷ்ணகிரி லைன், மாரிகுப்பம் வழியாக மலையாளி மைதானம் வரையிலும்; சல்டானா சதுக்கம் முதல் சொர்ணா நகர் மெயின் ரோடு, அசோகா நகர் மசூதி வரை 9.5 கிலோ மீட்டர் துாரம் ஆப்டிக் பைபர் கேபிள்கள் பதிக்க பாரதி ஏர்டெல் நிறுவனம் அனுமதி கோரியுள்ளனர்.

உறுப்பினர்கள்: இதனால் நகராட்சிக்கும், தங்கவயல் நகருக்கும் என்ன பயன். மத்திய அரசின் பி.எஸ்.என்.எல்., அனுமதி கோரப்பட்டதா. அவர்களின் கவனத்திற்கு நகராட்சி தெரிவித்ததா.

நகராட்சி பொறியாளர் மஞ்சுநாத்: இதன் மூலம் நகராட்சிக்கு 71 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதனால் நகராட்சி பணிகள் மேற்கொள்ள முடியும்.

நகராட்சி மேலாளர்: கர்நாடக அரசின் அறிவிப்பின் படி, சொத்து வரி மூன்று சதவீதமாக இருப்பதை ஐந்து சதவீதமாக உயர்த்தலாம்.

தங்கராஜ் - மா.கம்யூனிஸ்ட்: சொத்து வரியை ஒரு சதவீதமாக குறைக்கலாம். தங்கச்சுரங்க குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளை, குடியிருப்பவர்களுக்கே சொந்தம் ஆக்க வேண்டும் என்று நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஜெயபால் - காங்கிரஸ்: நகராட்சியில் வெறும் நான்கு கவுன்சிலர் வார்டுகளுக்கு மட்டுமே வேலைகள் நடக்கின்றன. இந்த கவுன்சிலர்கள், பினாமி பெயரில் ஒப்பந்தம் பெறுகின்றனர்.

ஆணையர்: எல்லாம் சட்ட விதிகள்படி தான் நடக்கின்றன. எதுவாக இருந்தாலும் பொத்தம் பொதுவாக சொல்லாமல் பெயரை சொல்லுங்கள்.

ஜெயபால்: 31வது வார்டு கவுன்சிலர் ஷாலினி கணவர் பினாமி பெயரில் ஒப்பந்தம் பெற்றுள்ளார்.

ஷாலினி - காங்கிரஸ்: என் பெயரை குறிப்பிட்டு பேசியதால், நான் பதில் சொல்லியாக வேண்டும். எங்கள் பெயரில் ஒப்பந்தம் இருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இதை சும்மா விட மாட்டேன். தனிப்பட்ட விரோதம் தேவையில்லை.

ஜெயபால்: மிரட்டலுக்கும், பயமுறுத்தலுக்கும் நான் பயப்பட போவதில்லை. என்னிடம் ஆதாரம் உள்ளது.

ஆணையர்: பொறுமை வேண்டும். பிரச்னைகள் பற்றி பேசுங்கள்.

தங்கராஜ்: பெமல் தொழிற்சாலையின் வரித்தொகை 17 கோடி ரூபாய் கிடைத்ததாக தெரிகிறது. இதில் 4 கோடி ரூபாய் செலவில் தெரு மின் விளக்குகள் போடப்பட்டன. ஆனால், ஆண்டர்சன்பேட்டை -ஒடானியேல் சாலையில் தெருவிளக்கு அமைக்கப்படவில்லை.

ஜெயபால்: தங்கவயலில் பல கோடி ரூபாய் செலவில் வளர்ச்சி பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. எவ்வளவு தொகை வந்தது என்ற விபரம் வேண்டும் என்று 15 நாட்களுக்கு முன் கடிதம் கொடுத்தேன். இதுவரை பதில் தரவே இல்லை.

மஞ்சுநாத்: நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாராக இருக்கிறோம்

ஜெயபால்: பெமல் தொழிற்சாலை வழங்கிய தொகை எவ்வளவு. இதில் மின் விளக்குகளுக்காக எவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டது. அந்த பணத்திற்கு செலவு கணக்கு காண்பிக்க வேண்டும்.

நிதித்துறை அதிகாரி ஷர்மிளா: மின் விளக்குகள் பொருத்துவதற்கு 4 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள தொகைக்கான செலவு விபரம், இரண்டு நாட்களில் வழங்கப்படும்.

ஜெயபால்: இப்போது கூறாமல் எதற்கு அவகாசம் கேட்கிறீர்கள். மக்கள் வரி பணம் வீணாகிறது. வெளிப்படை தன்மை இல்லை. உங்களிடம் நியாயம் எதிர்பார்க்க முடியாது. அடுத்து சாப்பிடுவதற்கு பிரியாணி வழங்குவீர்கள். அதிலும் ஊழல். ஒரு பிரியாணி 450 ரூபாய் என பில் காட்டுவீர்கள். இது என்ன ஸ்பெஷல் பிரியாணியோ.

இவ்வாறு கூறியபடியே வெளிநடப்பு செய்தார்.

Advertisement