25 ஆண்டு தரைப்பாலத்திற்கு விரைவில் மூடு விழா

ஆவடி:ஆவடியில் இருந்து கண்ணப்பாளையம், மேல்பாக்கம், ஆயில்சேரி, சோராஞ்சேரி மற்றும் பூந்தமல்லி சுற்று வட்டார பகுதிகளுக்கு செல்வதற்கு பாதை இல்லாமல் இருந்தது.

இதற்கு தீர்வாக, 25 ஆண்டுகளுக்குமுன், பொதுப்பணித்துறை சார்பில், ஆவடி, காமராஜர் நகர் பகுதியில் கூவம் ஆற்றில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீடில், 60 மீட்டர் துாரத்தில் புது தரைப்பாலம் அமைக்க கட்டப்பட்டது.

இதனால், மேற்கண்ட கிராமத்தினர் பயனடைந்து வந்தனர். தினமும் 500க்கும் மேற்பட்ட இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் சென்று வந்தன.

ஒவ்வொரு மழை காலத்திலும், கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் தரைப்பாலம் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும், ஆவடி சேக்காடு ஆற்றங்கரை பகுதி மற்றும் காமராஜர் நகர் அருகே தேவி நகரில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.

உயர்மட்ட பாலம்



இதையடுத்து, ஆவடி - கண்ணப்பாளையம் இணைக்கும் விதமாக கூவம் ஆற்றின் இடையே, உயர்மட்ட பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த 2020ல், 7.60 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது.

இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில், தரைப்பாலத்தை ஒட்டியுள்ள கரை பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதையடுத்து மக்கள் பயன்பாடு குறையத் துவங்கியது. அதேநேரம் போதை பொருள்கள் பயன்படுத்துவோரின் கூடாரமாக மாறியது.

கடந்த 2023 செப்., 6ம் தேதி, தரைப்பாலத்தில் மது அருந்திய வடமாநில வாலிபர், அதீத மது போதையில், கூவம் ஆற்றில் விழுந்து உயிரிழந்தார்.

குறிப்பாக, இரவு நேரங்களில் குற்றவாளிகள் சமூக விரோத செயல்களுக்கு திட்டம் தீட்டும் இடமாகவும் மாறி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

சமூக விரோத செயல்கள் மற்றும் ஊருக்குள் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, தரைப்பாலத்திற்கு மூடு விழா நடத்த திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது.

அதன்படி, ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவின்படி, 7.84 லட்சம் ரூபாய் செலவில் தரைப்பாலத்தை இடிக்க, இம்மாதம் துவக்கத்தில் பூஜை போடப்பட்டது. விரைவில் இத்தரைப்பாலம் இடித்து அகற்றி தடுப்புகள் அமைக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு சவாரி வருமா?

தரைப்பாலம் வாயிலாக பகுதிவாசிகள், கூவம் ஆற்றில் ஜிலேபி, கட்லா, விரால், கெண்டை, குரவ மீன்களை பிடித்து வியாபாரம் செய்து வந்தனர். பொழுதுபோக்கு தலமாக சோராஞ்சேரி முதல் ஆவடி வரை 2 கி.மீ., துாரம் படகு சவாரி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம்.

- அசோக், 36; பகுதிவாசி.

Advertisement