15 வயது சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு '35 ஆண்டு'

கலபுரகி: கலபுரகி மாவட்டம், ஆளந்தா தாலுகாவின், கிராமம் ஒன்றில் வசிப்பவர் சைபன்னா நாகன்னா, 25. இவர், அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், சிறுமியை பலவந்தமாக, ஆளந்தாவின் மகளிர் பொது கழிப்பறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

அதன்பின் நண்பரின் காரில், சிறுமியை ஹூப்பள்ளிக்கும், அங்கிருந்து ஹரியானாவுக்கும் கடத்தி சென்றார். வீடு ஒன்றில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்தார்.

இதற்கிடையே மகளை காணாமல் பல இடங்களில் தேடிய பெற்றோர், ஆளந்தா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை நடத்தி, சிறுமியை கண்டுபிடித்து மீட்டனர். சைபண்ணா நாகண்ணாவை கைது செய்தனர். விசாரணையை முடித்து கலபுரகியின் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.

விசாரணையில் சைபண்ணா நாகண்ணாவின் குற்றம் உறுதியானதால், அவருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை, 38,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி யமனப்பா பம்மனகி, நேற்று தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சட்ட சேவை ஆணையம் சார்பில், 7 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி உத்தரவிட்டார்.

Advertisement