கார் - லாரி மோதிய விபத்து ஒரே குடும்பத்தில் மூவர் பலி

ராம்நகர்: கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
ராம்நகர், சென்னப்பட்டணா தாலுகா, திட்டமரனஹள்ளி அருகே உள்ள சர்வீஸ் சாலையில், நேற்று காலை 11:00 மணியளவில் மாருதி 800 கார் ஒன்று சென்றது. அப்போது, எதிர்திசையில் வந்த கன்டெய்னர் லாரி, எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில், கார் சின்னாபின்னமானது. சாலையில் இருந்து லாரி விலகி சென்றது.
காரில் இருந்த ஐந்து பேரில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி டிரைவர் நாகேஷ் உட்பட மூன்று பேர் பலத்த காயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னப்பட்டணா போக்குவரத்து போலீசார் நடத்திய விசாரணையில், மங்கடாஹள்ளி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சிவபிரகாஷ், 37, புட்டகவுரம்மா, 72, சிவரத்னா, 50, நடராஜூ, 42, சுமா, 36 ஆகிய ஐவரும் நேற்று காரில் வந்து கொண்டிருந்தனர். லாரி மோதியதில் காரில் இருந்த சிவபிரகாஷ், புட்டகவுரம்மா, சிவரத்னா உயிரிழந்தது தெரிந்தது.