பெருங்களத்துார் 'டாஸ்மாக்' கடையால் தினசரி விபத்தில் சிக்கும் வாகனங்கள்

பெருங்களத்துார்:தாம்பரம் - முடிச்சூர் சாலையில், பழைய பெருங்களத்துார், அம்பேத்கர் சிலை அருகே 'டாஸ்மாக்' கடை இயங்கி வருகிறது.

இங்கு வரும் மதுப்பிரியர்கள், தங்களின் பைக், கார், ஆட்டோ, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களை, முடிச்சூர் சாலையிலேயே நிறுத்தி செல்கின்றனர். மது அருந்தி விட்டு, நீண்ட நேரம் கழித்து வந்து, வாகனங்களை எடுத்து செல்கின்றனர்.

பகலில் குறைந்த வாகனங்களே காணப்பட்டாலும், இரவில் ஏராளமான வாகனங்கள் அடாவடியாக, சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.

இதனால், அந்த இடத்திற்கு அருகே வந்தவுடன், திடீரென வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதை பார்த்து, வலதுபுறம் திரும்பும் வாகன ஓட்டிகள், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.

தினசரி அப்பகுதியில் விபத்து நடப்பது தொடர்ந்தாலும், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள பீர்க்கன்காரணை போலீசார், கண்டும் காணாமல் உள்ளனர்.

உயிரிழப்பு ஏற்படும் முன், உயர் அதிகாரிகள் தலையிட்டு, மதுக்கடைக்கு வருவோரின் வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement