தங்கவயல் நகராட்சியில் ரூ.125 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் ரூ.2.36 கோடிக்கு உபரி என மதிப்பீடு

தங்கவயல்: தங்கவயல் நகராட்சியில் 2025- - 26 ம் ஆண்டுக்கான பட்ஜெட் 125 கோடி மதிப்பீட்டில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தங்கவயல் நகராட்சியில் நேற்று காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை மாதாந்திர கூட்டம், அதனை தொடர்ந்து பட்ஜெட் கூட்டமும் நடந்தது.
பட்ஜெட் கூட்டம் துவங்கிய போது, பட்ஜெட் குறிப்புகள் அடங்கிய 33 பக்க புத்தகத்தை படிக்காமல், சில பேப்பர்களில் கம்ப்யூட்டர் டைப்பிங் மேட்டரை மேலாளர் சசிகுமார் கடகடவென்று வாசித்தார். 15 நிமிடங்களில் படித்து முடித்தார். எந்த உறுப்பினரும் இடை மறித்து கேட்கவில்லை. நகராட்சி தலைவர் இந்திரா காந்தி எழுந்து கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என்றார்.
இதன்படி மொத்த வருமானம்: 125 கோடியே 1 லட்சத்து 664 ரூபாய். செலவு: 122 கோடியே 64 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய். உபரி: 2 கோடியே 36 லட்சத்துக்கு 35 ஆயிரத்து 664 ரூபாய்.
இதன்பின், உறுப்பினர்களிடையே நடந்த விவாதம்:
பிரவீன் - சுயேச்சை: நகரின் முக்கிய பிரச்னைகள் பல உள்ளன. இது பற்றி பேச அனுமதிக்க வேண்டும்.
தலைவர்: சுருக்கமாக பேசுங்கள்.
பிரவீன்: நகரோத்னா திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்தில், வீடுகள் தோறும் கழிவு நீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், கழிவுகள் வெளியேறாமல் வீடுகளுக்குள் தேங்கி நிற்கிறது. இதற்கு யார் பொறுப்பு. கவுன்சிலர்கள் சுத்தம் செய்ய வேண்டுமா; ஒப்பந்த பணி செய்தவர் யார்.
கருணாகரன் - காங்கிரஸ்: சொர்ணா நகர் வார்டிலும் இதே பிரச்னை. தொகுதி எம்.எல்.ஏ., வீடு உள்ள பகுதியிலும் பாதாள சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட மிஷின் என்னவானது. உதவாத வாகனங்களை ஏன் வாங்க வேண்டும்.
கோதண்டன் - சுயேச்சை: அம்பேத்கர் நகர் வார்டிலும் இதே பிரச்னை. இதற்கு தீர்வு என்ன.
ஆணையர்: குடிநீர், வடிகால் வாரிய அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் சிறப்பு கூட்டம் நடத்தலாம்.
கருணாகரன்: கூட்டம் பற்றி இப்போதே முடிவு செய்யுங்கள்.
ஆணையர்: அடுத்த வியாழன் அன்று கூட்டம் நடத்தப்படும்.
பிரவீன்: தெருநாய்களால், தெருக்களில் நடமாட முடியவில்லை. எந்த நேரத்தில் கடித்து குதறுமோ தெரிய வில்லை. இதற்காக நகராட்சி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது.
சுகன்யா - சுயேச்சை: எங்கள் வார்டிலும் இதே நிலை தான் உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
ஆணையர்: விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு செய்ய வேண்டும். தடுப்பூசிகள் போட வேண்டும் என இரு வழிகள் உள்ளன. இது பற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
பிரவீன்: தேசிய கவி குவெம்பு சாலையில் நுழைவாயில் ஏற்படுத்த வேண்டும்.
மோகன்ராஜ் - நியமன உறுப்பினர்: கோடைக்காலம் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. நகராட்சி மூலம் டேங்கர் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
தேவி கணேஷ் - காங்கிரஸ்: இதுகுறித்து நகராட்சியில் கடிதம் கொடுத்துள்ளேன். அது பற்றி தேவையில்லாமல் பேச வேண்டாம்.
சக்திவேலன் - சுயேச்சை: நியமன உறுப்பினர்கள் பணிகள் என்னென்ன. கூட்டத்தில் பேச அனுமதி உள்ளதா.
ஆணையர்: ஆளும் கட்சி அதிகாரத்தில் நியமனம் செய்யப்படுகின்றனர். நகராட்சி தலைவர் அனுமதியுடன் பேசலாம்.
தங்கராஜ்: தங்கவயலில் குடிநீருக்கு நிரந்தர தீர்வு இல்லை. கிருஷ்ணாபுரம், நாகாமரத்து ஓடை பகுதியில் தடுப்பணை திட்டம், எரகோள் அணை நீர் பெற வேண்டும். பேத்தமங்களா ஏரி நீரும் மீண்டும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேணுகோபால் - ம.ஜ.த.,: இரண்டு ஆண்டுகளுக்கு முன் போர்வெல் அமைக்கப்பட்டது. இரண்டு பட்ஜெட் கூட்டமும் முடிந்துள்ளது.
ஆனாலும் போர்வெல் நீரை பெற மின் இணைப்பு வழங்கப்பட வில்லை.
மஞ்சுநாத் - பொறியாளர்: ஒருவாரத்தில் இணைப்புகள் வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.