விளைபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் பொருளீட்டு கடன் பெறலாம்

ராமநாதபுரம் : விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் இருப்பு வைத்து, பொருளீட்டு கடன் பெறலாம்.

மாவட்ட விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளன. அறுவடை காலங்களில் விளைப்பொருட்களின் விலை வீழ்ச்சி அடைவதால், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் இருப்பு வைத்துவிலையேற்ற காலங்களில் அதிக விலைக்கு விற்கலாம். 180 நாள்கள் வரை இருப்பு வைத்து பொருளின் சந்தை மதிப்பில் 50 முதல் 75 சதவிதம் வரை 5 சதவிதம் வட்டி விகிதத்தில் அதிகபட்சமாக ரூ.5 லட்சம் பொருளீட்டு கடனாக பெறலாம்.

இதன்படி ராமநாதபுரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் நெல் 1175 மூடைகள் 775.50 குவிண்டால் இருப்பு வைத்து பொருளீட்டுகடன் கோரிய 5 விவசாயிகளுக்கு ரூ.9 லட்சத்து 89 ஆயிரம் பொருளீட்டுகடன் தொகையானது காசோலையாக கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கியுள்ளார். எனவே விவசாயிகள் தங்களது பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வரை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கிகளில் வாடகைக்கு ( நாள் ஒன்றுக்கு 1 குவிண்டாலுக்கு 25 பைசா வீதம்) இருப்பு வைத்து பொருளீட்டுகடன் பெற்று பயன்பெறலாம் என ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்.

Advertisement