கொரோனா முறைகேடு குறித்து விசாரிக்க மற்றொரு கமிட்டி அமைக்க அரசு முடிவு

பெங்களூரு: பா.ஜ., ஆட்சி காலத்தில் நடந்ததாக கூறப்படும் கொரோனா முறைகேடு குறித்து, விசாரணை நடத்த மற்றொரு கமிட்டி அமைக்க, முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2020 மற்றும் 2021ல், கர்நாடகாவில் கொரோனா தொற்று தீவிரமாக இருந்தது. கொரோனாவை கட்டுப்படுத்த அன்றைய பா.ஜ., அரசு போராடியது. நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்டு, மருந்துகள், முக கவசங்கள், ஆக்சிஜன், கிருமி நாசினி, தடுப்பூசிகள் உட்பட மருத்துவ உபகரணங்கள் வாங்கியது.

நஷ்டம்



'கொரோனாவை காரணம் காண்பித்து, கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர். மருத்துவ உபகரணங்களுக்கு, நிர்ணயித்த விலையை விட, கூடுதல் விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் அரசு கருவூலத்துக்கு நஷ்டம் ஏற்படுத்துகின்றனர்' என, அன்றைய எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால், முறைகேடு குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்துவதாக கூறியது. அதன்படி காங்கிரஸ் அரசு வந்த பின், கொரோனா முறைகேடு குறித்து, விசாரணை நடத்த நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையில் கமிஷன் அமைத்து முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். கமிஷனும் விரிவாக விசாரணை நடத்தியது.

கொரோனா காலத்தில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தி, சமீபத்தில் அரசிடம் இடைக்கால அறிக்கை அளித்தது. அதில் கொரோனா நேரத்தில், உபகரணங்கள் வாங்கும் போது, நிர்ணயித்த விலையை விட பல மடங்கு அதிக பணம் கொடுத்துள்ளதாக விவரிக்கப்பட்டிருந்தது.

மைக்கேல் குன்ஹா கமிஷன் அறிக்கை குறித்து, ஆலோசனை நடத்த நேற்று முன்தினம் பெங்களூரின் விதான் சவுதாவில், அமைச்சரவை துணை கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் சிவகுமார், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கொரோனா முறைகேடு தொடர்பாக, விசாரணை நடத்த மற்றொரு கமிட்டி அமைக்கவும், இது குறித்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஆலோசனை நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக, துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது:

கொரோனா நேரத்தில் சாம்ராஜ்நகர் மருத்துவமனையில், ஆக்சிஜன் இல்லாமல் பலர் உயிரிழந்தது குறித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.ஏ.பாட்டீல், நீதி விசாரணை நடத்தி அறிக்கை அளித்திருந்தார். இந்த அறிக்கையை நிராகரித்து, நீதிபதி மைக்கேல் குன்ஹா கமிஷனிடம் மறு விசாரணை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

இடைக்கால அறிக்கை



கொரோனா முறைகேடுகள் குறித்து, மைக்கேல் குன்ஹா மிகவும் சிறப்பாக விசாரணை நடத்தி, இடைக்கால அறிக்கை அளித்துள்ளார். அறிக்கையை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை பெறப்படும்.

கொரோனா நேரத்தில் பணியாற்றிய, 29 அதிகாரிகளுக்கு நீதிபதி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. அவர்கள் பதில் அளிக்கவில்லை. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அறிக்கையில் அரசியல்வாதிகளின் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 15 நாட்களுக்கு ஒரு முறை, ஆலோசனை கூட்டம் நடத்தவும், கமிட்டிக்கு உயர் அதிகாரிகளை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளதால், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளை கமிட்டிக்கு நியமித்து, அவர்களுக்கும் சில பொறுப்புகள் அளிக்கப்படும்.

மைக்கேல் குன்ஹா அளித்த அறிக்கை, மிகவும் பெரிதாக உள்ளது. அதை ஆய்வு செய்ய கூடுதல் அதிகாரிகள் தேவை. எனவே இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் கொண்ட, மற்றொரு கமிட்டியும் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement