விருதையில் மான் வேட்டை வனத்துறை விசாரணை

விருத்தாசலம் : கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில், தமிழ்நாடு அரசு வனத்தோட்டக் கழகம் சார்பில் முந்திரி தோப்புகள் பராமரிக்கப்படுகிறது.

இங்கு, வசிக்கும் புள்ளி மான்கள், மயில், குரங்கு உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் உணவு, குடிநீர் பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது குடியிருப்புகளுக்கு படையெடுப்பது வழக்கம்.

நேற்று பகல் 11:00 மணிக்கு முந்திரி தோப்பில் பலத்த சப்தம் கேட்டதால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் விருத்தாசலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், வனவர் சஞ்சீவி, வன காப்பாளர் நவநீதகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, 2 வயது புள்ளி மான், வலது புற வயிற்று பகுதியில் பலத்த காயத்துடன், ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிந்தது.

கார்குடல் கிராமத்தில் உள்ள வனத்தோட்டக்கழக நர்சரியில் கால்நடை மருத்துவர் பாரதிராஜா தலைமையிலான குழுவினர், மானை பிரேத பரிசோதனை செய்து, அங்கேயே புதைக்கப்பட்டது.

வனச்சரக அலுவலர் ரகுவரன் உத்தரவின்படி, மானை வேட்டையாடிய மர்ம நபர்கள் குறித்து வனத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மானை வேட்டையாட நாட்டுத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Advertisement