தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி

இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்காக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது.

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பொங்கல் விழா ஏப்.5ம் தேதி, மின் அலங்கார தேர்பவனி ஏப்.6, 7ம் தேதி பால்குடம், ஊஞ்சல் உற்சவம், பூப்பல்லக்கும், 8ம் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

பங்குனி பொங்கல் விழா நடைபெறும் நாட்களின் போது ஏராளமான பக்தர்கள் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் நீராடிய பிறகு அக்னிசட்டி, ஆயிரங்கண் பானை, கரும்பாலைத் தொட்டில்,அங்கப்பிரதட்சணம் போன்ற நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபடுவர்.

தற்போது தெப்பக்குளத்தில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததை தொடர்ந்து தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தி தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் கூறியதாவது:

பக்தர்களின் வசதிக்காக தெப்பக்குளத்தில் தேங்கியிருந்த பழைய தண்ணீர் மற்றும் குப்பை அகற்றிவிட்டு தற்போது புதிதாக குழாய்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.மேலும் குடிதண்ணீர்,கழிப்பறை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Advertisement