வங்கி கணக்கை விற்று மோசடி : சென்னை வாலிபர் கைது

கடலுார் : வங்கி கணக்கு துவங்கி பணம் மோசடி செய்த சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார், திருவந்திபுரம், பில்லாலிதொட்டியைச் சேர்ந்தவர் வேல்ராஜ்,34; ஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என ஒருவர் கூறியதை நம்பி அவர் கூறிய வங்கி கணக்கில் 10 லட்சத்து 61ஆயிரத்து 500 ரூபாயை அனுப்பினார்.

ஆனால் அந்த மர்ம நபர், பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்தார். புகாரின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் வேல்ராஜ் அனுப்பிய பணத்தில் 9 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய், சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த சங்கர்,34; என்பவரின் வங்கி கணக்கிற்கு சென்றது தெரிந்தது.

இவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் தனது ஆதாரங்களின் மூலம் வங்கி கணக்கை துவக்கி, பழக்கமான வேறு நபரிடம் 20 ஆயிரம் ரூபாய் கமிஷன் பெற்றுக் கொண்டு வங்கி கணக்கை கொடுத்தது தெரிந்தது. உடன், போலீசார், சங்கரை கைது செய்தனர். சைபர் கிரைம் குற்றங்களில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் தங்களது வங்கி கணக்கு விவரங்கள், ஆதார எண், ஓட்டுநர் உரிமம் போன்ற அரசு ஆதாரங்களை அறிமுகம் இல்லாத நபர்களிடம் பகிர வேண்டாம் என, எஸ்.பி., ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement