15 ஆண்டாக சீரமைக்கப்படாத ரோடு ஊரை காலி செய்யும் கிராம மக்கள்

இளையான்குடி: இளையான்குடி அருகே விஜயன்குடி கிராமத்தில்ரோடு மிகவும் சேதமடைந்து நடந்து செல்வதற்கு கூட பயனற்ற நிலையில் இருப்பதால் கிராம மக்கள் ஊரை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இளையான்குடி அருகே உள்ள விஜயன்குடி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து மருதங்கநல்லுார் வழியாக சிவகங்கை செல்லும் ரோடு 15 வருடங்களாக சீரமைக்கப்படாமல் உள்ளதால் ரோடு முழுவதும் கரடு,முரடாக கற்கள் சிதறி காணப்படுகிறது.

அவசர காலத்தில் 108 ஆம்புலன்ஸ் மற்றும்ஆட்டோ கூட வர மறுப்பதால் உடல்நலம் சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விஜயன்குடி கிராமத்தில் ரேஷன் கடை, பள்ளிக்கூடம், நுாலகம் ஆகியவற்றிற்கு மாங்குடி, நல்கிராமம், மணக்குடி, பிடாரனேந்தல் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து வரும் மக்கள் இந்த ரோட்டில் வருவதற்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

கிராம மக்கள் கூறியதாவது: விஜயன்குடி ரோட்டை சீரமைக்க வேண்டுமென்று நீண்ட வருடங்களாக அரசு அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆகவே மாவட்ட நிர்வாகம் விஜயன்குடி கிராம மக்களின் நலன் கருதி உடனடியாக இந்த ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையேல் ஊரை காலி செய்து வேறு இடத்திற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்றனர்.

Advertisement