சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசாமிக்கு 5 ஆண்டு சிறை

புதுச்சேரி : சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

புதுச்சேரி, கிருமாம்பாக்கம் அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்தவர் முனியப்பன், 58; மீனவர். இவர் கடந்த 2021ம் ஆண்டு 5 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததுடன், யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என மிரட்டியுள்ளார்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் போக்சோ பிரிவின் கீழ், முனியப்பன் மீது வழக்குப் பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

அரசு சிறப்பு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி சுமதி நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளி முனியப்பனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 26 ஆயிரம் அபராதம் விதித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ. 2 லட்சம் வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கினார்.

Advertisement