பணி மேற்பார்வையாளருக்கு தி.மு.க., செயலாளர் மிரட்டல்

பண்ருட்டி: மேல்குமாரமங்கலம் ஊராட்சியில் தன்னை கேட்காமல் எப்படி பணி செய்கிறீர்கள் என, தி.மு.க.,செயலாளர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் பணி மேற்பார்வையாளராக பணிபுரிபவர் குமார்,50; இவரும், ஊராட்சி செயலாளர் அன்புவேல் என்பவரும் நேற்று மேல்குமாரமங்கலம் அங்கன்வாடி மையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள சென்றனர். மதியம் 1:00 மணிக்கு அங்கு வந்த தி.மு.க., கிளை செயலாளர் அரவிந்தன், தன்னை கேட்காமல் எப்படி பராமரிப்பு பணிகள் செய்யலாம் எனக் கேட்டு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தார். குமாரின் பைக்கை அடித்து சேதப்படுத்தினார்.
இதுகுறித்து பி.டி.ஓ., மோகனாம்பாள் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவத்தை கண்டித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் அண்ணாகிராமம் ஒன்றிய அலுவலகம் முன்பு மாவட்ட துணைத் தலைவர் மணவாளன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.