தோழமையை மறக்காத மாணவிகள் பெற்றோரிடம் ஒப்படைத்த நெகிழ்வு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் தோழமையை மறக்காத பத்தாம் வகுப்பு மாணவிகள், வீட்டிலிருந்து வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர், இன்று துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக ஒன்றாக சேர்ந்து படித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், வீட்டிலிருந்து வெளியேறிய இருவரும், மாலை வரை வீடு திரும்பவில்லை.

பல இடங்கில் தேடியும் கிடைக்காததால் அதிருப்தியடைந்த பெற்றோர், அன்றிரவு 9:30 மணியளவில், விருத்தாசலம் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், மாணவிகளை தேடும் பணியில் முடுக்கி விடப்பட்டனர்.

முதற்கட்டமாக பெற்றோரிடம் விசாரித்த நிலையில், அங்குள்ள சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை சரிபார்த்தனர். அதில், மாணவிகள் குறிப்பிட்ட பகுதியை தாண்டி செல்லவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் போலீசார் தனித்தனி குழுக்களாக சென்று, வீதி வீதியாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அதில், வீட்டிலிருந்து வெளியேறிய மாணவிகள், அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள சந்து பகுதியில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. மாணவிகளை மீட்ட போலீசார், பெற்றோரை வரவழைத்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததும், உயர்கல்விக்கு பிரிந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் மனமுடைந்த மாணவிகள், வீட்டிலிருந்து வெளியேறியது தெரிய வந்தது. பின்னர், மாணவிகளுக்கு அறிவுரை கூறிய போலீசார், அவர்களை பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

மாணவிகள் மாயமானதாக புகார் கிடைத்த சில மணி நேரத்தில், அவர்களை மீட்ட போலீசாரை, டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சம்பவம், விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement