விருதையில் சிக்னல் பழுது: எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம்
விருத்தாசலம், : விருத்தாசலம் ரயில் நிலையம் அருகே சிக்னல் பழுது காரணமாக பல்லவன், மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில்கள், 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
சென்னை - காரைக்குடி (12605) பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், எழும்பூர் ரயில் நிலையத்தில் மாலை 3:45 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:00 மணிக்கு சென்றடையும். நேற்று மாலை வழக்கம்போல் புறப்பட்ட ரயில், விருத்தாசலம் ரயில் நிலையம் அடுத்த கோ.பூவனுார் ரயில் நிலையம் அருகே இரவு 7:00 மணிக்கு வந்தபோது, திடீரென சிக்னல் கோளாறு ஏற்பட்டது.
இதனால், கோ.பூவனுார் ரயில் நிலையம்- விருத்தாசலம் ரயில் நிலையம் இடையே திடீரென ரயில் நிறுத்தப்பட்டது. தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று, சிக்னலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர், 40 நிமிடங்கள் தாமதமாக, விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு, இரவு 7:00 மணிக்கு வர வேண்டிய ரயில், 7:40 மணிக்கு வந்து, புறப்பட்டு சென்றது. இதனால், பயணிகள் நடு வழியில் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
புதுச்சேரி ரயில் காரணம்
புதுச்சேரி - மங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (16855), வாரந்தோறும் வியாழக்கிழமையில், விருத்தாசலம், சேலம், ஈரோடு வழியாக மங்களூரு செல்கிறது. வாரந்தோறும், மாலை 6:30 மணிக்கு விருத்தாசலம் வந்து, இரவு 7:00 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.
இந்த ரயிலுக்கு சிக்னல் கிடைக்காமல், நேற்றிரவு 7:26 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால், பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக சென்றது குறிப்பிடத்தக்கது.