போலி பத்திர வழக்கு: மேலும் ஒருவர் கைது

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நில அபகரிப்பில் ஈடுபட்ட கும்பலில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருக்கோவிலுார், ரிஷிவந்தியம், அரகண்டநல்லுார் பகுதிகளில் கடந்தாண்டு போலி ஆவணங்களை தயார் செய்து பலரது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாக, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் கடந்த, 17ம் தேதி விழுப்புரம் மாவட்டம், அருணாபுரத்தை சேர்ந்த சீனுவாசன், 54; என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர் பல நபர்களுடன் கூட்டு சேர்ந்து போலி ஆவணங்களை தயார் செய்து, 8க்கும் மேற்பட்ட பத்திர பதிவு செய்ததை ஒப்புக்கொண்டார்.

அதன்பேரில் விழுப்புரம் மாவட்டம், ஆதிச்சனுாரை சேர்ந்த தண்டபாணி மகன் சக்திவேல், 36; கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில், அரகண்டநல்லுாரில், தனியார் இண்டர்நெட் சென்டர் வைத்து, போலியாக ஆதார் கார்டுகள் தயார் செய்து கொடுத்தது தெரிய வந்தது.

''இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவர். போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவுகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என எஸ்.பி., ரஜத் சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement