உணவு ஒவ்வாமையால் 4 குழந்தைகள் பலி உ.பி., குழந்தைகள் காப்பகத்தில் சோகம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அரசு காப்பகத்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட நான்கு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன; உடல்நிலை பாதிக்கப்பட்ட 16 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வயிற்று வலி
உ.பி.,யின் லக்னோவில் அரசு சார் ஆதர வற்ற குழந்தைகள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பெற்றோரை இழந்த ஆதரவற்ற 147 குழந்தைகள் தங்கியிருந்தன.
இதில், மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளும் அடங்கும். இங்குள்ள குழந்தைகளுக்கு இந்த காப்பகத்திலேயே உணவு தயாரிக்கப்படுகிறது.
இங்கு தங்கியிருந்த குழந்தைகளுக்கு வழக்கம்போல், கடந்த 23ம் தேதி உணவாக கிச்சடி மற்றும் தயிர் வழங்கப்பட்டது.
இதை சாப்பிட்ட 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்த சில மணி நேரத்திலேயே வயிற்று வலியால் அவதிப்பட்டன. சில குழந்தைகள் வாந்தி எடுத்ததுடன், மயங்கியும் விழுந்தன.
உடல்நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு பல மணி நேரம் சிகிச்சை அளித்தும் பலனின்றி இரண்டு குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு குழந்தைகள் நேற்று முன்தினம் உயிரிழந்தன. இது குறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜிவ்குமார் தீக்சித் கூறுகையில், ''கடந்த 23ம் தேதி 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
''சிகிச்சை பலனின்றி நான்கு குழந்தைகள் உயிரிழந்தன. இதில், இரண்டு பெண் குழந்தைகள் அடங்கும். உயிரிழந்த குழந்தைகள் அனைத்தும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்; 12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள்.
''உடல்நிலை மோசமடைந்த மேலும் இரண்டு குழந்தைகளுக்கு, அருகில் உள்ள மற்றொரு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற குழந்தைகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
முதற்கட்ட விசாரணையில், காப்பகத்தில் வழங்கப்பட்ட உணவு சாப்பிட்டதாலேயே குழந்தைகள் உயிரிழந்தது தெரியவந்துஉள்ளது.
சோதனை
சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டதை அடுத்து, டாக்டர்கள் குழு காப்பகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டது.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் அங்குள்ள பொருட்களை சோதனை செய்தனர். குழந்தைகள் சாப்பிட்ட உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்த பின்னரே, குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.