நடிகை தங்க கடத்தல் வழக்கு நகை கடைக்காரர் கைது

பெங்களூரு: ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு, 12 கோடி ரூபாய் மதிப்பிலான 14.8 கிலோ தங்கக் கட்டிகள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், 33, அவரது முன்னாள் காதலன் தருண் கொண்டாரு ராஜு ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ரன்யாவுக்கு ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் மறுத்தது.

இதனால், பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரன்யா ஜாமின் மனு தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி ஈரப்பண்ணா பவாடி நாயக் நேற்று விசாரித்தார்.

வருவாய் புலனாய்வு பிரிவு வக்கீல் மது ராவ், ''மனுதாரர் செய்த தவறுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. அவரிடம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடியுரிமை உள்ளது. ஜாமின் கிடைத்தால், அங்கு தப்பிச் செல்ல வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

இதை ஏற்று, ரன்யாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையில், தங்கம் கடத்தல் குறித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் பல்லாரியைச் சேர்ந்த ஷாகில் ஜெயின், 23, என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. நகை கடை நடத்தி வரும் இவர், துபாயில் இருந்து ரன்யா தங்கம் கடத்தி வர உதவியதும் தெரிந்தது.

ரன்யா கைது செய்யப்பட்டதும், பல்லாரியில் இருந்து மும்பைக்கு சென்று உறவினர் வீட்டில் பதுங்கியதும் தெரிந்தது. நேற்று முன்தினம் மும்பை சென்ற அதிகாரிகள், ஷாகில் ஜெயினை கைது செய்தனர்.

Advertisement