குழந்தைகள் பாடப்பொருள் தயாரிப்பு; புதுச்சேரி அரசு பள்ளி சாதனை

புதுச்சேரி; டில்லி தேசிய கல்வி நிறுவனம் சார்பில், அகில இந்திய குழந்தைகளுக்கான பாடப்பொருள் தயாரிக்கும் போட்டி நடந்தது.
டில்லியில் நடந்த இப்போட்டியில் 700க்கும் மேற்பட்ட ஒலி மற்றும் ஒளி தொடர்பான பாடப்பொருள் வீடியோக்கள் இடம்பெற்றன. அதில் வெவ்வேறு தலைப்பில் 101 விருதுகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட விருதுகள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் பெறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேகாலயா மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பிராந்திய கல்வி நிறுவனத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில், புதுச்சேரி அரியூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் வளர்மதி முருகன், பொம்மலாட்டம் மூலம் தயாரித்த ஐந்தாம் வகுப்பிற்கான மலேரியா விழிப்புணர்வு குறித்த பாடப்பொருள் வீடியோ சிறந்த வீடியோவிற்கான ரூ. 20,000 பரிசு தொகை, விருது பெற்றது. சிலாங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தேசிய கல்வி நிறுவனம் இயக்குனர் அமரேந்திர பெகரா, பிலோரிட்டா தக்கர் விருதுகளை வழங்கி பாராட்டினர்.