நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு நீதித்துறை பணிகள் ஒதுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

6

புதுடில்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த நீதித்துறை பணிகளையும் தற்காலிகமாக ஒதுக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


டில்லி ஐகோர்ட் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கோடிக்கணக்கான ரூபாய் கட்டுக்கட்டாக கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் எழுப்பியது. அவரை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றவும் கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.


இதுகுறித்து சுப்ரீம் கோர்ட் உள்விசாரணையை நடத்தி வருகிறது. அதே நேரத்தில், டில்லி காவல்நிலையம் யஷ்வந்த் வர்மா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


இந் நிலையில், யஷ்வந்த் வர்மாவை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அவர் தனது பதவியை ஏற்கவும், பொறுப்பேற்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


அதே நேரத்தில், அவர் நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், எந்த நீதித்துறை பணிகளையும் தற்காலிகமாக ஒதுக்கக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட் கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் அனுப்பி வைத்துள்ளது.


நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வழக்கை மறுபரிசீலனை செய்து வருவதாகவும், ஒரு சில நாட்களில் அவரது பணியிடம் மாற்றம் குறித்து முடிவு எடுக்க இருப்பதாகவும் முன்னரே மத்திய அரசு தெரிவித்து இருந்தது, குறிப்பிடத்தக்கது.


இதேபோல், பல மாதங்களாக நிலுவையில் இருந்த மற்றொரு டில்லி ஐகோர்ட் நீதிபதி சந்திரதாரி சிங்கை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றி அனுப்பும் கொலீஜியத்தின் பரிந்துரையையும் மத்திய அரசு அங்கீரித்து இருக்கிறது.

Advertisement