ஐந்து தங்கம் வென்றது தமிழகம் * கிராண்ட்ப்ரி தடகளத்தில் அபாரம்

பெங்களூரு: இந்தியன் கிராண்ட்ப்ரி தடகளத்தில் தமிழக நட்சத்திரங்கள் ஐந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.
இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் 'இந்தியன் கிராண்ட்ப்ரி 1' தடகளம் பெங்களூருவில் நடந்தது. பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் (பி) தமிழகத்தின் ஏஞ்சல் சில்வியா (11.67 வினாடி), ஸ்ரீவித்யா (12.00) தங்கம், வெள்ளி வென்றனர். 200 மீ., ஓட்டத்தில் ஜொலித்த ஏஞ்சல் சில்வியா (23.94 வினாடி) இரண்டாவது தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் கவின்ராஜா (5.00 மீ.,), கவுதம் (5.00), தங்கம், வெள்ளி கைப்பற்றினர்.
நீளம் தாண்டுதலில் தமிழக வீரர்கள் விஷ்ணு (7.73 மீ.,), சரண் (7.65), ஷரோன் (7.64), முதல் மூன்று இடம் பிடித்து அசத்தினர். குண்டு எறிதலில் தமிழகத்தின் விஷ்வா ஐய்யப்பன் (16.40 மீ.,)தங்கம் வென்றார். உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் ஆதர்ஷ் ராம் (2.18) வெள்ளி கைப்பற்றினார்.
சத்யா 'வெள்ளி'
பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் சத்யா (3.80 மீ.,) வெள்ளி, தர்ஷினி (3.60 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார். ரிலையன்ஸ் வீராங்கனை பரனிகா (4.00 மீ.,) தங்கம் வென்றார். 100 மீ., தடை ஓட்டத்தில் ஜோதி (13.07, ரிலையன்ஸ்) தங்கம், தமிழகத்தின் நந்தினி (13.78) வெண்கலம் வசப்படுத்தினர்.
தவிர தமிழகத்தின் தமிழகத்தின் கோபிகா (உயரம் தாண்டுதல், 1.80 மீ.,), அபிநயா ஸ்ரீ (நீளம் தாண்டுதல், 6.13 மீ.,), ஹேமமாலினி (ஈட்டி எறிதல், 46.05 மீ.,) வெள்ளி வென்றனர்.
ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ('டி' பிரிவு) ரிலையன்ஸ் அணியின் குரிந்தர்விர் சிங், 10.20 வினாடி நேரத்தில் ஓடி, புதிய தேசிய சாதனை படைத்தார். முன்னதாக மணிகண்டா, 2023ல் 10.23 வினாடி நேரத்தில் ஓடி இருந்தார். நேற்று மணிகண்டா (10.22) இரண்டாவது இடம் பிடித்தார்.
தமிழகம் நட்சத்திரங்கள் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் கைப்பற்றினர்.

Advertisement