ரூ.8 லட்சம் கையாடல் மேலாளர் மீது புகார்

திருவள்ளூர்:சென்னையில் உள்ள பாரத் பைனான்சியல் இன்க்ளூஷன் லிட்., நிதி நிறுவனத்தின் கிளை நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி, மணவாளநகரில் உள்ள ஒண்டிக்குப்பத்தில் செயல்பட்டு வருகிறது.

இங்கு, கிளை மேலாளராக, கடம்பத்துார் ஒன்றியம் கூவம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், 40, என்பவர் பணிபுரிந்து வருகிறார். கடந்த பிப்., 8-ம் தேதி, சென்னை மேலாளர் எம்.செல்வரசன், 50, மணவாளநகர் பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனத்தில் தணிக்கை செய்தார்.

இதில், ராமச்சந்திரன் கடன் வழங்கும் அதிகாரிகள், 'ஐடி மற்றும் பாஸ்வேர்டை' பயன்படுத்தி 8 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து கேட்டபோது, ஒரு வாரத்திற்குள் பணத்தை செலுத்தி விடுவதாக ராமச்சந்திரன் கூறியுள்ளார். ஆனால், பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து, சென்னை மேலாளர் கேட்டதற்கு, 'இனிமேல் பணம் கேட்டு வந்தால், கொலை செய்து விடுவேன்' என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து செல்வரசன் அளித்த புகாரின்படி, மணவாளநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement