தங்கம் வென்றார் மணிஷா * ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...

அம்மான்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் இந்தியாவின் மணிஷா.
ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப் ஜோர்டானில் நடக்கிறது. இந்தியா சார்பில் 30 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நேற்று நடந்தன. 62 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மணிஷா, 5-1 என கிர்கிஸ்தானின் கல்மெராவை வீழ்த்தினார்.
அடுத்து நடந்த பைனலில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற வட கொரியாவின் முன் ஹியாங் யாங்கை எதிர்கொண்டார். போட்டி முடிய ஒரு நிமிடம் இருந்த போது மணிஷா 2-7 என பின்தங்கி இருந்தார். பின் மீண்டு வந்த மணிஷா, 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார்.
53 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அன்டிம், 0-10 என ஜப்பானின் கியூகாவிடம் தோல்வியடைந்தார். பின் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அன்டிம், தென் கொரியாவின் மெங் ஹுசானை வென்றார்.
76 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரீத்திகா, 6-7 என கிர்கிஸ்தானின் ஐபெரியிடம் தோற்று, வெள்ளி கைப்பற்றினார். 59 கிலோ பிரிவில் மங்கோலியாவின் ஆல்ட்ஜினை 4-0 என வீழ்த்திய இந்தியாவின் முஸ்கான், வெண்கலம் வென்றார். 68 கிலோ பிரிவு இந்தியாவின் மான்சி லாதெர், 12-2 என கஜகஸ்தானின் இரினாவை வென்று, வெண்கலம் வசப்படுத்தினார்.

Advertisement