'தமிழக வரலாறு பற்றிய பார்வையை மாற்றியவர் நாணயவியல் ஆய்வாளர் இரா.கிருஷ்ணமூர்த்தி'

சென்னை: ''பழந்தமிழகத்தில் நாணய புழக்கம் இல்லை என்ற, வரலாற்று ஆய்வாளர்களின் பார்வையை மாற்றியவர், 'தினமலர்' நாளிதழின் முன்னாள் ஆசிரியரும், சங்ககால நாணயவியல் ஆய்வாளருமான இரா.கிருஷ்ணமூர்த்தி,'' என, மத்திய தொல்லியல் துறையின், கேரள மாநில முன்னாள் இயக்குநர் சத்தியமூர்த்தி பேசினார்.
'இந்திய வரலாற்று கட்டமைப்பில் தொல்லியல் துறையின் முக்கியத்துவம்' என்ற தலைப்பில், சென்னையில் நேற்று துவங்கிய கருத்தரங்கில், அவர் பேசியதாவது:
'வரலாறு என்பது, அப்போது கிடைக்கும் தரவுகளால் எழுதப்படுவது. தமிழகத்தில், நாணயம் வெளியிடும் பழக்கம் இல்லை' என்ற வட மாநில ஆய்வாளர்களின் கூற்று, 'தினமலர்' நாளிதழ் முன்னாள் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்த, சங்க கால மன்னர்கள் வெளியிட்ட முத்திரையுடன் கூடிய நாணயத்தால் மாறியது.
அகழாய்வு
அதேபோல், சோழர்கள் காலத்தில் கலை வளம் இல்லை என்ற கருத்து, பேராசிரியர் கோவிந்தசாமியால் கண்டறியப்பட்ட பிரகதீஸ்வரர் பிரகார ஓவியங்களால் மாறியது.
இப்படி, பெருங்கற்கால மக்கள் இரும்பின் பயன்பாட்டை அறியாதவர்கள் என கூறப்பட்டு வந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட நாட்டின் தென்பகுதிகளின் ஈமக்காடுகளில் செய்யப்பட்ட அகழாய்வுகள் பொய்யாக்கின.
தொல்லியல் துறையின் தொடர்ச்சியான ஆராய்ச்சியால் தான், வரலாறு தொடர்ந்து மாறுகிறது. அதனால், வரலாற்றில் எந்தவொரு கண்டுபிடிப்பையும் இறுதியாக கருதக் கூடாது.
தற்போது, சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள மிக தொன்மையான பொருட்கள், ராபர்ட் புரூஸ்புட், ஆதிச்சநல்லுாரில் அகழாய்வு செய்து எடுத்து வந்தவை.
ஆதிச்சநல்லுார் அகழாய்வுதான் தமிழகத்தின் துவக்கப்புள்ளி. அதுதான், மெகாலித்திக் எனும் பெருங்கற்காலம் பற்றிய உலகின் பார்வையை மாற்றியது. தொடர்ந்து, தாஸ் குப்தா, இந்திய தொல்பொருட்களை தன்மைக்கேற்ப தொகுத்து, அருங்காட்சியக நுாலகமாக்கினார்.
அய்யப்பன் என்பவர், 'மெகாலித்திக் ஆய்வு பற்றிய அறிவியல் பார்வை தேவை' என்றார். இதைத்தொடர்ந்து, கோதாவரி, கிருஷ்ணா, தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள புதைப்பிடங்கள் அகழாய்வு செய்யப்பட்டன.
இதில், கல்பதுக்கை, மண்தாழிகள், மண்தொட்டி ஆகியவற்றில் சடலத்தை வைத்து புதைக்கும் பழக்கம் இருந்தது உறுதியானது.
கடந்த, 1944ல், மார்டிமர் வீலர், கர்நாடகாவின் பிரம்மகிரியை அறிவியல் முறையில் அகழாய்வு செய்து, அசோகர் கால நகரமாக அறிவித்தார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, நேரடி புதைப்பிடங்களை விட, இரண்டாம் நிலை புதைப்பிடங்கள் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டது.
அதாவது, இறந்த மனிதனை, பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் உணவாக்கிய பின், மீதமிருக்கும் எலும்புகளை சேகரித்து, தாழிகள், தொட்டிகள், பதுக்கைகளில் வைத்து, சடங்குகள் செய்து வழிபடும் பழக்கம் இருந்துள்ளதை யூகிக்க முடிகிறது.
ஆதிச்சநல்லுாரில், விலா, தாடை, முதுகெலும்புகள் இருந்தன. பற்களின் அமைப்பு சைவ உணவு உண்டதை வெளிக்காட்டின. பல நாட்டினரின் எலும்புக்கூடுகளும், 'சைனஸ்' போன்ற பிரச்னை இருந்ததும், பலவித மண்டை ஓடுகளின் வாயிலாக உறுதியானது.
இதிலிருந்து, அருகில் இருந்த பாண்டியர்களின் துறைமுகத்துக்கு பல நாட்டினர் வந்து சென்றது உறுதியாகிறது.
இங்கு கிடைத்த இரும்பு, செம்பு பொருட்கள் மற்ற இடங்களில் கிடைத்தவற்றை விட மூத்ததாகவும், கலைநயம் மிக்கதாகவும் உள்ளன. அலெக்சாண்டர் ரியாவின் அகழாய்வு முறை முன்னோடி முறையாக உள்ளது.
தொல்பொருள்
அதேபோல, புதுச்சேரிக்கு அருகில் உள்ள அரிக்கமேட்டில், ரோமானிய தொல்பொருட்கள் கிடைத்தன. கேரளாவின் கொல்லம் மாவட்டம், மாங்காட்டில் செய்த அகழாய்வில், எளிமையான புதைகுழி இருந்ததும், மூன்று கல்வட்டங்கள் இருந்ததும் தெரிய வந்தது.
அதாவது, புதைப்பிடங்களில் ஒரே மாதிரியாகவும், வெவ்வேறு விதமாகவும் பல தாழிகளும், கல்திட்டைகளும் கிடைத்துள்ளன.
இவற்றில் கிடைத்துள்ள மண்பாண்டங்கள், கோப்பைகள், சடங்கு பொருட்களை வைத்து, அக்கால மக்களின் வாழ்வியல், பண்பாடு, பயன்பாடு தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை அறிய முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


மேலும்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சல் தலைவி சுட்டுக்கொலை
-
நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது