சென்னை அணியை வென்றது பெங்களூரு: கேப்டன் ரஜத் படிதர் அரைசதம்

2

சென்னை: பிரிமியர் லீக் போட்டியில் பேட்டிங்கில் சரிந்த சென்னை அணி 50 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பெங்களூரு அணி மீண்டும் வெற்றி பெற்றது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ், 'பவுலிங்' தேர்வு செய்தார்.

படிதர் அரைசதம்: பெங்களூரு அணிக்கு பில் சால்ட், விராத் கோலி ஜோடி துவக்கம் கொடுத்தது. கலீல் அகமது வீசிய முதல் ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த சால்ட், அஷ்வின் வீசிய 2வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 45 ரன் சேர்த்த போது நுார் அகமது 'சுழலில்' சால்ட் (32) 'ஸ்டம்பிங்' ஆனார். ஜடேஜா வீசிய 7வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய தேவ்தத் படிக்கல் (27), அஷ்வின் 'சுழலில்' சிக்கினார்.
பதிரானா வீசிய 11வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டிய கோலி (31), நுார் அகமது பந்தில் சரணடைந்தார். கலீல் அகமது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கேப்டன் ரஜத் படிதர், 30 பந்தில் அரைசதம் எட்டினார். பதிரானா பந்தில் படிதர் (51 ரன், 3 சிக்சர், 4 பவுண்டரி) ஆட்டமிழந்தார். சாம் கர்ரான் வீசிய கடைசி ஓவரில் 'ஹாட்ரிக்' சிக்சர் விளாசினார் டிம் டேவிட்.

பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது. டேவிட் (22) அவுட்டாகாமல் இருந்தார்.

ரச்சின் ஆறுதல்: கடின இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ஹேசல்வுட் தொல்லை தந்தார். இவரது 'வேகத்தில்' ராகுல் திரிபாதி (5), கேப்டன் ருதுராஜ் (0) வெளியேறினர். புவனேஷ்வர் பந்தில் தீபக் ஹூடா (4) அவுட்டானார். சாம் கர்ரான் (8) சோபிக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ரச்சின் ரவிந்திரா (41) ஓரளவு கைகொடுத்தார். சுயாஷ் சர்மா வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஷிவம் துபே (19) ஆறுதல் தந்தார். அஷ்வின் (11) நிலைக்கவில்லை.

சென்னை அணி 99 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

சுயாஷ் சர்மா பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ஜடேஜா (25) ஆறுதல் தந்தார். ஹேசல்வுட் வீசிய 19வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த தோனி, குர்ணால் பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சென்னை அணி 20 ஓவரில் 8 விக்கெட் 146 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. தோனி (30) அவுட்டாகாமல் இருந்தார்.

17 ஆண்டுக்கு பின்
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணி 17 ஆண்டுக்கு பின் நேற்று வெற்றி பெற்றது. கடைசியாக 2008ல் இங்கு வெற்றி பெற்றிருந்தது.
* இங்கு இவ்விரு அணிகள் மோதிய 10 போட்டியில், சென்னை 8, பெங்களூரு 2ல் வென்றன.

சூப்பர் கீப்பர்
சென்னை அணி சுழற்பந்துவீச்சாளர் நுார் அகமது பந்தில் பெங்களூருவின் பில் சால்ட்டை கண் இமைக்கும் நேரத்தில் (0.10 வினாடி) 'ஸ்டம்பிங்' செய்தார் தோனி. சமீபத்தில் மும்பை அணியின் சூர்யகுமாரை, 0.12 வினாடியில் 'ஸ்டம்பிங்' செய்திருந்தார்.

பீல்டிங் சொதப்பல்
பெங்களூரு கேப்டன் ரஜத் படிதர், மூன்று முறை (17, 19, 19 ரன்) கொடுத்த 'கேட்ச்' வாய்ப்புகளை சென்னையின் தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, கலீல் அகமது வீணடித்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட படிதர் (51) அரைசதம் கடந்தார்.

'ஹெல்மெட்டை' தாக்கியது
சென்னையின் பதிரானா 'பவுன்சராக' வீசிய பந்து (10.1 ஓவர்), கோலியின் 'ஹெல்மெட்டை' தாக்கியது. அதிர்ஷ்டவசமாக அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து விளையாடிய அவர், அதே ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார்.

கோலி வழியில் படிதர்
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் அரைசதம் விளாசிய 2வது பெங்களூரு கேப்டன் என்ற பெருமை பெற்றார் ரஜத் படிதர். இதற்கு முன், 2013ல் விராத் கோலி (58) இங்கு அரைசதம் அடித்திருந்தார்.

அட்டவணை மாற்றம்
கோல்கட்டா, ஈடன் கார்டனில் வரும் ஏப். 6ம் தேதி நடக்க இருந்த கோல்கட்டா-லக்னோ அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி, ராமநவமி விழா காரணமாக ஏப். 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement