4 மாத உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் விவசாய சங்க தலைவர்

புதுடில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2024 நவ., 26 முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால், 70, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக, உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தெரிவித்தது.
அறிவுறுத்தல்
வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2024 பிப்., 13 முதல், பஞ்சாப் - ஹரியானா எல்லைகளான ஷம்பு, கானவுரியில், ஏராளமான விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.
டில்லியை நோக்கி விவசாயிகள் செல்ல திட்டமிட்டிருந்ததை அறிந்த பாதுகாப்பு படையினர், எல்லைகளில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.
பஞ்சாபைச் சேர்ந்த விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, 2024 நவ., 26 முதல், கானவுரி எல்லையில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் அவர், 20 கிலோ எடை குறைந்தார். அவருக்கு மருத்துவ உதவி வழங்கும்படியும், பேச்சு நடத்தும்படியும் பஞ்சாப் அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.
உத்தரவு
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், என்.கோட்டீஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
பஞ்சாப் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குர்மிந்தர் சிங் கூறுகையில், ''தண்ணீரை குடித்து, காலவரையற்ற உண்ணாவிரதத்தை நேற்று காலை ஜக்ஜித் சிங் தல்லேவால் முடித்துக் கொண்டார்.
''ஷம்பு, கானவுரி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை அப்புறப்படுத்தி விட்டோம். அடைக்கப்பட்டிருந்த அனைத்து சாலைகள், நெடுஞ்சாலைகளையும் திறந்து விட்டோம்,'' என்றார்.
ஜக்ஜித் சிங் தல்லேவாலை பாராட்டிய நீதிபதிகள், 'அவர் எந்த அரசியல் கட்சியையும் சாராத உண்மையான விவசாய சங்க தலைவர்' என, குறிப்பிட்டனர்.
மேலும், கள நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப், ஹரியானா அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விவசாயிகளின் குறைகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும்படி, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான குழுவுக்கு உத்தரவிட்டனர்.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய வேளாண் அமைச்சருமான சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்திய அரசின் பிரதிநிதிகளுடன், கடந்த 19ல், சண்டிகரில், விவசாய சங்க பிரதிநிதிகள் சர்வான் சிங் பந்தர், அபிமன்யு கோஹர், காகா சிங் கோத்ரா உள்ளிட்டோர் பேச்சு நடத்தினர். இதன்பின், பஞ்சாபின் மொஹாலிக்கு அவர்கள் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சர்வான் சிங் பந்தர், அபிமன்யு கோஹர் மற்றும் காகா சிங் கோத்ரா உள்ளிட்டோரை சிறையில் இருந்து போலீசார் நேற்று விடுவித்தனர்.
மேலும்
-
கடன் தொல்லையால் அவதி: சொந்த வீட்டில் கொள்ளை நாடகமாடி சிக்கிய நபர்
-
நிதி முறைகேடு குற்றம் உறுதி; பிரான்ஸ் வலதுசாரி கட்சி பெண் தலைவருக்கு தடை
-
ஜிப்லியால் முடங்கிய சாட்ஜிபிடி: சி.இ.ஓ., விடுத்த அன்பு கட்டளை!
-
ஜிப்லியில் இணைந்தார் இ.பி.எஸ்; காலத்தால் அழியாத கலையுடன் கலக்கிறேன் என பதிவு
-
சத்தீஸ்கரில் தொடரும் என்கவுன்டர்; நக்சல் தலைவி சுட்டுக்கொலை
-
நெய்வேலி அனல் மின் நிலையம் முற்றுகை: விவசாயிகள் 400 பேர் கைது