சொத்து வரியை 50 சதவீதம் குறையுங்கள் மேயரிடம் கூட்டணி கட்சியினர் முறையீடு

கோவை, : கோவை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம், மேயர் ரங்கநாயகி தலைமையில் நேற்று நடந்தது; மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார். கூட்டம் துவங்கியதும், தி.மு.க., கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மா.கம்யூ., - இந்திய கம்யூ., - ம.தி.மு.க., மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியை சேர்ந்த, 21 கவுன்சிலர்கள் சார்பில், மேயரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.

மா.கம்யூ., கவுன்சில் குழு தலைவர் ராமமூர்த்தி: சொத்து வரி உயர்வை, 50 சதவீதமாக குறைக்க வேண்டும். ஆண்டுதோறும் ஆறு சதவீதம் வரி உயர்வையும், ஒரு சதவீதம் அபராதம் விதிப்பதையும் ரத்து செய்ய வேண்டும். 'ட்ரோன் சர்வே' செய்யக் கூடாது.

கூடுதலாக கட்டடம் கட்டியிருந்தால் வரி விதிக்கலாம். சிறு கடைகள், ஒர்க் ஷாப்களை 'கமர்ஷியல்' கட்டடங்களாக மாற்றக்கூடாது. முதல்வர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று, சொத்து வரி உயர்வை குறைக்க, மாமன்றம் வாயிலாக பரிந்துரைக்க வேண்டும்.

காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார: திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் தி.மு.க., கவுன்சிலர்களும் சேர்ந்து சொத்து வரி உயர்வை குறைக்கக்கோரி, தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதேபோல், கோவையிலும் தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்ப வேண்டும்.

ம.தி.மு.க., கவுன்சில் குழு தலைவர் சித்ரா: 100 சதவீத சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆறு சதவீத வரி உயர்வு தமிழக அரசுக்கும், கோவை மாநகராட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. இதை முதல்வருக்கு தெரியப்படுத்த வேண்டும். சொத்து வரியை குறைத்தால், 234 தொகுதியிலும் வெற்றி பெறலாம்.

காங்கிரஸ் கட்சி கவுன்சில் குழு தலைவர் அழகு ஜெயபாலன்: ஒரு சதவீத அபராத வரி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை வசூலிக்கப்படுகிறது. அலுவலர்களிடம் கேட்டால், இன்னும் அரசாணை வரவில்லை என்கின்றனர். உடனடியாக அரசாணை பெற்று, அபராத வரியை ரத்து செய்ய வேண்டும்.

தி.மு.க., கவுன்சிலர் கார்த்திக் செல்வராஜ்: சொத்து வரி உயர்வுக்கு யார் காரணம் என்பதையும் சொல்ல வேண்டும். சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசே காரணம். இதை நான் சொல்லவில்லை. திருப்பூர் எம்.பி., சுப்பராயன் தெரிவித்திருக்கிறார்.

'அமைச்சரிடம் வலியுறுத்துவேன்'



மேயர் ரங்கநாயகி பதிலளிக்கையில், ''சொத்து வரி தொடர்பாக, அமைச்சரை நேரில் சந்தித்து கடிதம் கொடுக்கப் போகிறேன். 2024-25ம் நிதியாண்டில் ஆறு சதவீதம் சொத்து வரி, அரசு தரப்பில் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். உயர்த்திய ஆறு சதவீத வரியை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும்.

வ.உ.சி., பூங்காவில் பறவைகள், விலங்குகள் இல்லாததால், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாக இருக்கின்றன.

அதனால், வ.உ.சி., டைடல் பூங்காவாக பெயர் மாற்றம் செய்து, விஞ்ஞான அறிவை வளர்க்கும் வகையில், பூங்காவை மாற்றினால் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது செயல்படும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் போதிய வசதி இல்லை; வாகனங்கள் நிறுத்தவும் இடமில்லை. செம்மொழி பூங்காவுக்கு அருகே உள்ள சிறைத்துறை மைதானத்தில் புதிய அலுவலகம் கட்டி, பிரதான அலுவலகத்தை இட மாற்றம் செய்ய வேண்டும். 66 அல்லது, 83ல் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி தர வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்,'' என்றார்.

Advertisement