மேலுார், கொட்டாம்பட்டியில் பங்குனி மாதத் திருவிழாக்கள்

மேலுார் : மேலுார், கொட்டாம்பட்டி பகுதி கோயில்களில் நடந்த பங்குனித் திருவிழாக்களில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.

மேலுார் மண்கட்டி தெப்பக்குளம் காளியம்மன் கோயிலில் நேற்று பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர். முன்னதாக பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலை ஊற்றி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

* தும்பைப் பட்டி வீரகாளியம்மன் கோயிலில் மார்ச் 21-ல் கொடியேற்றப்பட்டது. முதல் நாளான நேற்று து.அம்பலகாரன்பட்டியில் இருந்து வீரகாளியம்மன், மந்தை கருப்பணசுவாமி சிலைகள் பெரிய மந்தைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏப்.3 ல் சிலைகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். ஏப்.4 ல் நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் சுவாமி சிலைகள், பதுமைகளை கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்வர். பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும், அங்கபிரதட்சணை செய்தும், கரும்பு தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துவதோடு நிறைவு பெறும்.

கொட்டாம்பட்டி



மணப்பச்சேரி மந்தை முத்தாலம்மன் கோயிலில் 15 நாட்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று சவுக்கையில் (சிலை செய்யும் இடம்) இருந்து அம்மனை அலங்காரம் செய்து கோயிலுக்கு கொண்டு சென்றனர். இன்று ஏப். 2 கிடாவெட்டி பொங்கல் வைப்பர். பின்னர் அம்மனை அருகில் உள்ள பூஞ்சோலைக்கு கொண்டு செல்வர்.

* வேலாயுதம்பட்டி பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் மார்ச் 25 முதல் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று தாமரை குளத்தில் இருந்து அம்மனை அலங்காரம் செய்து கோயிலுக்கு கொண்டு சென்றனர். சிறப்பு அர்ச்சனை, ஆராதனை நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு ஏற்றினர். இன்று ஏப்.2 பக்தர்கள் தாமரைக் குளத்தில் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்துவர்.

கோயில் முன்பு கிடாவெட்டி பொங்கல் வைப்பர். தொடர்ந்து கோயிலில் இருந்து அம்மனை தாமரை குளத்திற்கு கொண்டு சென்று கரைப்பதோடு திருவிழா நிறைவு பெறும்.

Advertisement