2025 - 26ம் கல்வி ஆண்டிற்கான அரசு பள்ளிகள் நேற்று திறப்பு

புதுச்சேரி : புதுச்சேரியில் ஆண்டுத்தேர்வு, விடுமுறை முடிந்து அரசு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதை அடுத்து, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கடந்த 2024-25ம் கல்வி ஆண்டில் இருந்து 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவர்களுக்கு கடந்த மார்ச் 23ம் தேதி ஆண்டுத் தேர்வுகள், முடிந்துவிடுமுறை விடப்பட்டது.விடுமுறை முடிந்து புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாமில் உள்ள அரசு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாள் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதன்படி, புதுச்சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள சுசிலாபாய் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளிக்கு வந்த மாணவிகளை, முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் விளக்கு ஏற்றி, கல்வி உபகரணங்கள் வழங்கி வரவேற்றனர்.

இந்நிலையில், மாணவர்களுக்கு தேவையான பாடநுால்கள் பெங்களூருவில் இருந்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், முன்னாள் மாணவர்களிடம் இருந்து புத்தகங்கள் பெறப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன.

வகுப்புகள் நேற்று துவங்கியுள்ள நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் அமல் போன்ற காரணங்களால் இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க கூடும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, பள்ளிகள் வரும் 30ம் தேதி வரை இயங்குகிறது. பின்,மே 1ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு, மீண்டும் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

Advertisement