கூடுதலாக தண்ணீர் திறக்க கோரிக்கை; பரிசீலிப்பதாக பொறியாளர் தகவல்

ஈரோடு: ஈரோட்டில் வேளாண் குறைதீர் நாள் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது.
கூட்ட விவாதம் வருமாறு:
கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலர் நல்லசாமி: கீழ்பவானி பாசனத்துக்கு, 6 நனைப்புக்கு தண்ணீர் திறப்பதற்கு மாறாக, 5 நனைப்புக்கு திட்டமிட்டு தண்ணீர் திறக்கப்படுகிறது. மே மாதம், 6ம் நனைப்புக்கு திறக்க வேண்டும்.

தமிழக விவசாயிகள் சங்கம் பெரியசாமி: கரும்பாலைகளில் விவசாயிகள் பதிவு செய்து கரும்பை வெட்டாமல், பதிவு செய்யாத கரும்பை அதிக விலை கொடுத்து வெட்டி, பணமும் உடன் வழங்கிவிடுகின்றனர். பதிவு செய்து கரும்பு காய்ந்து, பிழிதிறன் குறைந்த பின் வெட்டி, பணம் தர இழுத்தடிப்பதை தடுக்க வேண்டும்.
காளிங்கராயன் பாசன சபை வேலாயுதம்; காளிங்கராயன் பாசனத்துக்கு ஏப்., 23ல் தண்ணீரை நிறுத்தாமல், அதிக வெயில், பயிர் அறுவடையை கணக்கிட்டு கூடுதலாக, 15 நாள் தண்ணீர் திறக்க வேண்டும்.

மலைவாழ் மக்கள் சங்கம் குணசேகரன்: தாமரைக்கரை - கொங்கடை வனச்சாலையில், மணியாச்சி அருகே செங்குத்தாக சாலை உள்ளதால் விபத்து, பலி நடக்கிறது. அச்சாலையை சீரமைக்க வேண்டும். பர்கூர் மேற்கு மலை கோவில்நத்தம் பகுதி, கிழக்கு மலை கடையீரட்டியில் பி.எஸ்.என்.எல்., 4ஜி டவர் அமைத்துள்ளனர். அங்குள்ள மக்கள் 'பட்டன் போன்' பயன்படுத்துவதால், இந்த டவரால் பலனில்லை. இங்குள்ள மக்கள் பயன்பெறும்படி அலைவரிசையை மாற்றி அமைக்க வேண்டும். தாமரைக்கரை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், கிணறுகளை துார்வார வேண்டும்.

ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள்: பர்கூர் பகுதியில், 6 சமுதாய கிணற்றில் துார்வாரும் பணி நடக்கிறது. 25 கிணறுகளை துார்வார திட்ட வரைவு அனுப்பி உள்ளோம். நிதி வந்ததும், துார்வாரிவிடுவோம்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் திருமூர்த்தி: காளிங்கராயனில், 150 கனஅடி வீதம் ஏப்., 23 வரை தண்ணீர் திறக்கப்படும். அறுவடைக்காக கூடுதலாக, 10, 15 நாட்கள் தண்ணீர் திறக்க கோரியதால், அரசுக்கு பரிந்துரைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கலெக்டர்: தாமரைக்கரை - கொங்காடை வனச்சாலை, 4.4 கி.மீ.,க்கு சீரமைக்க, 3.8 கோடி ரூபாய் முதல்வரின் கிராமச்சாலை திட்டத்தில் வந்துள்ளது. மலைப்பகுதி ஊர் கிணறுகளை துார்வார திட்ட வரைவு தயாரிப்பதால், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement