சினிமாவில் நடிக்கும் 'நாயகர்கள்' சந்திக்கும் சவால்கள்

ராஜாராணி, தெறி, நெற்றிக்கண், கூர்கா, குட் நைட், தீரன் அதிகாரம் 1, நெஞ்சுக்கு நீதி, அலங்கு, கூரன் உள்ளிட்ட படங்களில், நாய்களை நடிக்க வைக்க, பயிற்சி அளித்தவர், செந்து மோகன். துணை நடிகராக, திரையுலக வாசலில் காலடி வைத்து, தற்போது நடிப்பு, விலங்கு பயிற்சி என இரு களத்திலும், தனி முத்திரை பதித்து வருகிறார்.

செல்லமே பக்கத்திற்காக, இவர் நம்மிடம் பகிர்ந்தவை:



துணை நடிகரில் இருந்து விலங்கு பயிற்சியாளரானது எப்படி?

என் அப்பா மோகன், மோப்பநாய் பிரிவில் போலீசாக இருந்தார். அவரிடம் இருந்து தான், நாய்களின் உளவியல், அதை பயிற்சி அளிக்கும் நுட்பங்களை அறிந்தேன். சின்ன வயதில் இருந்தே, நடிப்பில் ஆர்வம் இருந்ததால், இத்துறைக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டேன்.

நாய்கள் ஜாக்கிரதை படத்தின் முதல் காட்சியிலே, நானும், அந்த நாயும் தான் இருப்போம். இப்படத்தில், கதாநாயகன் சிபி சத்தியராஜை, நாய் கடிப்பது போன்ற காட்சி, பின்பு அவருடன் அன்பாக பழகும் காட்சி, கிளைமேக்ஸில் காட்டிற்குள் சென்று, சிபியின் மனைவியை புதைத்த இடத்தை காட்டும் போது காட்சி என, மூன்று வேறு கதை பரிணாமத்திற்கும், ஒரே உருவ ஒற்றுமை கொண்ட வெவ்வேறு நாய்களை பயன்படுத்தினோம். ஆரம்பத்தில் கடிக்கும் ஒரு நாய், பின்னாளில் உரிமையாளருடன் நெருங்கிவிடும். ஆனால், அதுவரை காத்திருந்து சினிமா எடுக்க முடியாது.

சினிமா ஷூட்டிற்கு எப்படி பயிற்சி அளிப்பீர்கள்?

அது, திரைக்கதையின் தன்மையை பொறுத்து மாறுபடும். சண்டை காட்சி, பாடல் காட்சி, உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளில், அதன் தன்மைக்கேற்ற பயிற்சி வழங்கப்படும்.

அலங்கு படத்தில் மட்டும், 50 நாய்கள் பயன்படுத்தி இருக்கிறோம். அப்படத்திற்கு, தெருநாய் தான் தேவைப்பட்டது. இயக்குனர் எதிர்பார்த்த நிறத்தில் உருவத்தில், ஒரு தெருநாய் தத்தெடுத்து, அதற்கு சில வகை பயிற்சிகள் வழங்கிய பிறகே, ஷூட்டிங் நடக்குமிடத்திற்கு அழைத்து வந்தேன்.

ஒரு பப்பியை ஹூரோவாக காட்ட வேண்டுமெனில், அதன் பின்பு, 5 நாய்கள் வருவதாக ஒரு காட்சி இடம்பெறும் எனில், ஹூரோவுக்கு ஒருவிதமாக பயிற்சியும், அதன் பின்னாள் நடந்து வரும் 5 நாய்களும், மெதுவாக நடந்து வருவதற்கான, பயிற்சியும் அளித்தால் தான் ஷூட்டிங் நடக்கும் போது, ஒரே முயற்சியில், அந்த காட்சி எடுக்க முடியும். இதில் ஒரு நாய் திடீரென ஓடிவிட்டாலும் அக்காட்சி சொதப்பிவிடும்.

நாய்கள் ஜாக்கிரதை, அலங்கு, கூரன் போன்ற, விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட முழுநீள திரைப்படத்தில், அக்காட்சியின் உணர்வை முழுமையாக, பார்வையாளர்களுக்கு கடத்த, நிறைய பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதுபோன்ற படங்கள் அதிகளவில் வந்தால் தான், மக்களிடம் விலங்கு பராமரிப்பு பற்றிய பார்வை மாறும்.

விலங்குகளை சினிமாவில் பயன்படுத்த விதிமுறைகள் என்ன?

மத்திய விலங்கு நல வாரியத்தின் இணையதளத்தில், சினிமாவில், விலங்குகளை பயன்படுத்த, அனுமதிக்க கோரி, தடையின்மை சான்று பெற விண்ணப்பிக்க வேண்டும். ஷூட்டிங் முடிந்த பிறகு, எடிட் செய்யாமல், விலங்கு பயன்படுத்திய காட்சிகளை அனுப்பி வைத்து ஒப்புதல் பெற வேண்டும். விலங்கு நல வாரியத்தில், தடையின்மை சான்று அளித்தால் மட்டுமே, சென்சார் போர்டில், அக்காட்சியை பயன்படுத்த அனுமதிக்கப்படும். இவ்விதிமுறை பின்பற்றாவிடில், அக்காட்சிகளை திரையிட முடியாது.

ஷூட்டிங்கில் சந்திக்கும் சவால்கள் என்ன?

சில திரைப்படங்களில், விலங்குகளின் பாதுகாப்புக்கு போதிய நிதி ஒதுக்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட காட்சி நடித்து முடித்ததும், அந்த விலங்கிற்கு, அதிகபட்ச ரிவார்டாக, உணவு தான் வழங்குகிறோம். பாதுகாப்பு குறைப்பாடு இருந்தால், மீண்டும் அவற்றை நடிக்க வைப்பது சாதாரண காரியமல்ல.

இதேபோல, திரைக்கதை உருவாக்கத்தின் போதே விலங்கு பயிற்சியாளரிடம் கலந்தாலோசித்து, அக்காட்சியை எடுப்பதற்கான சாத்தியங்கள் குறித்து விவாதிக்க வேண்டும். சில இடங்களில் தொழில்நுட்ப உதவியோடு, அக்காட்சியை எடுக்கலாம். ஒவ்வொரு காட்சியையும் விளக்கினால் தான், கற்பனையில் நினைத்ததை, திரையிலும் காட்சியாக்க, விலங்குகளுக்கு பயிற்சி அளிக்க முடியும். இதை வெளிநாடுகளில் பின்பற்றுகிறார்கள். தென் மாநில சினிமாவின் போக்கும் விரைவில் மாற வேண்டும்.

Advertisement