அரசு நிலத்தை ஒட்டிய மனையை வாங்கும் போது ஏற்படும் பிரச்னைகள் என்ன?

எதிர்காலத்தில் சொந்தமாக வீடு கட்டி குடியேறலாம் அல்லது நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற எண்ணத்தில் மக்கள் மனை வாங்க நினைக்கின்றனர். இதற்காக, புறநகருக்கு அப்பால் தொலைவான பகுதிகளை தேர்வு செய்வது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

இதன் அடிப்படையில், பக்கத்து மாவட்டத்தில் தொலைதுாரத்தில் செயல்படுத்தப்பட்டு இருக்கும் மனைப்பிரிவு திட்டங்களை சென்று மக்கள் பார்வையிடுகின்றனர். இது போன்ற மனைப்பிரிவு திட்டங்களில் நிலம் வாங்கும் போது, அடிப்படையாக சில விஷயங்களை துல்லியமாக கவனிக்க வேண்டும்.

இது போன்ற திட்டங்கள் எந்த வகை நிலத்தில், யாருடைய நிலத்தில் எதன் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்று பாருங்கள். அந்த மனைப்பிரிவு திட்டத்துக்கு நகர், ஊரமைப்பு சட்டப்படி, சம்பந்தப்பட்ட அரசு துறைகள் உரிய ஒப்புதலை வழங்கியுள்ளதா என்று பாருங்கள்.

நிலத்தின் பத்திரம், பட்டாவில் வில்லங்கம் எதுவும் இல்லை, முறையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்ற நிலையில் அடுத்த கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதில், நீங்கள் தேர்வு செய்யும் மனையின் நான்கு பக்கத்திலும் என்ன அமைந்துள்ளது என்று பாருங்கள்.

பொதுவான ஒரு மனை என்றால், அதன் முன்புறத்தில் சாலை இருக்கும். இடது, வலது பக்கத்தில், வேறு நபர்களின் மனைகள் இருக்கும். பின் பக்கத்திலும் இது போன்று தனியார் மனை உள்ளதா அல்லது அரசு நிலம் உள்ளதா என்று பார்ப்பது வழக்கமான ஒன்றாக அமைகிறது.

பெரும்பாலான மனைப்பிரிவு திட்டங்களிலும், மூன்று பக்கத்திலும் தனியார் மனை, ஒரு பக்கத்தில் சாலை என்று தான் இருக்கும் என்பதால் கவலை இல்லை.

ஆனால், நீங்கள் வாங்கும் மனையின் ஏதாவது ஒரு பக்கத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் இருக்கிறது என்றால், அதன் அளவு என்ன? அதன் விரிவாக்கம் காரணமாக உங்கள் மனைக்கு எதிர்காலத்தில் பிரச்னை வருமா என்று பார்க்க வேண்டும்.

அரசு துறைகளுக்கு சொந்தமான நிலம் இருந்தால், எதிர்கால வளர்ச்சி திட்டங்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்ற அரசு நிலங்கள் எந்த துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது? அங்கு என்ன வகையான வளர்ச்சி திட்டங்கள் வரும் என்பது குறித்த விஷயங்களையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

முந்தைய காலத்தில் பக்கத்தில் அரசு நிலம் இருந்தால், நம் மனையை சற்று விரிவாக்கி கொள்ளலாம் என்று மக்கள் நினைத்தனர். ஆனால், பல்வேறு அரசு துறைகள் தங்கள் நிலங்கள் குறித்த அளவுகளை மிக துல்லியமாக பராமரிக்க துவங்கியுள்ளதால், இது போன்ற விரிவாக்கம் செய்து வளைத்து போட்டால் அது பாதிப்பை தான் ஏற்படுத்தும்.

எனவே, நீங்கள் வாங்கும் மனைக்கு பக்கத்தில் அரசு நிலம் அமைந்து இருந்தால், அதற்கான பயன்பாடு குறித்து ஆராய வேண்டும். அதை வளைத்து போட நினைக்காதீர்கள் என்கின்றனர் வருவாய் துறை அதிகாரிகள்.

Advertisement