லஞ்ச வழக்கு; 16 ஆண்டுக்குப் பிறகு பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விடுதலை

6

சண்டிகர்: லஞ்ச வழக்கில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவை 16 ஆண்டுக்குப் பிறகு சி.பி.ஐ., நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் டில்லி அரசு இல்லத்தில் இருந்து கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதாக வெளியான தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், 2008ம் ஆண்டு நடந்த லஞ்ச வழக்கில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார். சுமார் 16 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு, சி.பி.ஐ., நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.

இது குறித்து நீதிமன்ற வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் யாதவ், "நான் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை. எனக்கு எதிரான விசாரணையில், நான் குற்றம் செய்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. நீதித்துறையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது," எனக் கூறினார்.

வழக்கின் பின்னணி!

கடந்த 2008ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டிற்கு சென்ற கிளர்க் ஒருவர், ரூ.15 லட்சம் ரொக்கத்தை கொடுத்துள்ளார். இந்தப்பணம், இன்னொரு நீதிபதிக்கு (நிர்மல் யாதவ்) லஞ்சமாக தரப்பட்டது; பெயரில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, வீடு மாறி வந்திருக்கிறது என்பதை புரிந்து கொண்ட நீதிபதி நிர்மல்ஜித் கவுர் போலீஸில் புகார் கொடுத்தார்.


சொத்துக்குவிப்பு வழக்கில், ஹரியானா கூடுதல் வக்கீல் சஞ்சீவ் பன்சால் என்பவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதற்காக, நீதிபதி நிர்மல் யாதவுக்கு கொடுத்து அனுப்பிய லஞ்சப்பணம் என்று சொல்லப்பட்டது. வழக்கை சி.பி.ஐ., விசாரித்தது.

இது தொடர்பாக 16 ஆண்டு விசாரணை நடந்த நிலையில், இன்று சி.பி.ஐ., நீதிமன்றம் தீர்ப்பை வெளியிட்டது. இதில்தான், குற்றம் நிரூபணம் செய்யப்படவில்லை என்று கூறி, நிர்மல் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement