பிரதமர் மோடி புத்திசாலி: டிரம்ப் மீண்டும் புகழாரம்

வாஷிங்டன்: '' பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி,'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் பாராட்டி உள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தேர்தல் பிரசாரம் முதல் பிரதமர் மோடியை தனது நண்பர் எனக் கூறி வருகிறார். அவரை பாராட்டியும் பேசி உள்ளார். அதேநேரத்தில் இந்தியா அதிகளவு வரி விதித்து வருகிறது எனவும் புகார் கூறியிருந்தார். கடந்த பிப்., மாதம் வெள்ளை மாளிகையில், அதிபர் டிரம்ப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதன் பிறகும், மோடியை பாராட்டினாலும், வரி குறித்து குற்றம்சாட்டியே டிரம்ப் பேசி வந்தார். இதற்கு பதில் வரி விதிக்கப்படும் எனவும் கூறியிருந்தார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
சமீபத்தில் கனடா, இந்தியா, சீனா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரியை டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில் டிரம்ப் கூறுகையில், '' சமீபத்தில் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் என்னை சந்தித்தார். நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். உலகில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இது கொடூரமானது. பிரதமர் மோடி மிகவும் புத்திசாலி. உண்மையில் அவர் எனது நண்பர். நாங்கள் இருவரும் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தினோம். இரு நாடுகளும் இணைந்து சிறப்பாக பணியாற்ற உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.











