நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் கல்வி: உறுதி அளித்தார் பிரியங்கா

5

வயநாடு: வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் கல்வி அளிக்கப்படும் என்று காங்கிரஸின் வயநாடு எம்.பி.யான பிரியங்கா உறுதி அளித்தார்.

வயநாட்டில் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் கடும் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் வீடுகள் இழந்தனர். 118 பேர் காணாமல் போயினர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில், கல்பெட்டாவில் உள்ள முண்டக்கய்-சூரல்மலா பகுதிகளைச் சேர்ந்த உயிர் பிழைத்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் விழாவை காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த விழாவை துவக்கி வைத்து பிரியங்கா பேசியதாவது:

வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு, தப்பிய 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பள்ளி மற்றும் உயர்கல்வி படிப்பில் சில பிரச்னைகள் இருந்தது.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி செலவை ஏற்று கொண்டு, புதிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உதவிப் பொருட்கள் வழங்கப்படும்.

அதிர்ச்சியில் உள்ள குழந்தைகளுக்கு மனதளவில் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்படும். தற்காலிக வகுப்பறைகள் அமைக்கப்படும், பாதிக்கப்பட்ட பள்ளிகளின் புனரமைப்பிற்கு தேவையான உதவி அளிக்கப்படும்.

குழந்தைகள் கல்வியில் பின்தங்கக்கூடாது. அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு பிரியங்கா பேசினார்.

Advertisement