தமிழக மக்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

41


சென்னை: '' தமிழக மக்களுக்கு எதிரான அரசியல் துன்பறுத்தலை மத்திய பா.ஜ., அரசு நிறுத்த வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததாக குற்றம்சாட்டி, அனைத்து ஒன்றியங்களிலும் தி.மு.க., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.


இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுதும் 1,600 இடங்களில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று ' எங்கள் பணம் எங்கே ?' என்ற இடி முழுக்கக் கேள்வியை எழுப்பிய மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுடன் தி.மு.க.,தோளோடு தோள் நின்றது.

கொளுத்தும் வெயிலில் உழைத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மறுப்பது நிர்வாகத் தோல்வி மட்டும் அல்ல கொடுமை. பா.ஜ., அரசு வேண்டும் என்றே நிதியை நிறுத்தி வைத்து, ஓட்டு மூலம் நிராகரித்த தமிழக கிராமப்புற ஏழை மக்களை தண்டித்து வருகிறது.

மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியான ரூ.4,034 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான அரசியல் துன்புறுத்தலை நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement