தேடப்பட்ட நக்சலைட் சுட்டுக்கொலை

தண்டேவாடா : சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கம் மிகுந்த தண்டேவாடா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, வனப்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் நேற்று ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் மீது, அங்கு பதுங்கியிருந்த நக்சல் அமைப்பினர் துப்பாக்கியால் சுடத்துவங்கினர். இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இதில், பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றவர்கள் தப்பியோடினர். தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பாதுகாப்பு படையினர், ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

அத்துடன், இறந்த பெண் நக்சலின் உடலையும் கைப்பற்றினர். இறந்த நபர், தெலுங்கானா மாநிலத்தின் வாராங்கல்லைச் சேர்ந்த ரேணுகா என்பது தெரியவந்தது.

நக்சல் அமைப்பின் சிறப்பு மண்டலக் குழுவின் உறுப்பினராக செயல்பட்ட ரேணுகா, சட்டப்படிப்பு பயின்றவர். கடந்த 1996ல் நக்சல் இயக்கத்தில் இணைந்த இவர், நக்சல் ஊடகப்பிரிவு பொறுப்பாளராகவும் இருந்தார்.

இவரைப் பற்றி தகவல் தெரிவிப்பவருக்கு சத்தீஸ்கர் அரசு 25 லட்சம் ரூபாயும், தெலுங்கானா அரசு 20 லட்சம் ரூபாய் என மொத்தம் 45 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது.

Advertisement