அறைக்கு வெளியே தாழ்ப்பாள் ஆடை மாற்றும் நர்ஸ்கள் பீதி
சென்னை, தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு, ஆடை மாற்றும் அறை, ஓய்வு அறை கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து வழக்கமான ஆடையில் வரும் செவிலியர்கள், மருத்துவமனைக்கான பிரத்யேக ஆடைகளை, மேற்கண்ட அறைகளில் மாற்றி கொள்வர். பணி முடிந்து செல்லும்போது, வழக்கமான ஆடையை மாற்றுவர்.
இதுபோன்ற சூழலில், ஆடையை மாற்ற செல்லும் செவிலியர்களின் அறைகளின் கதவை, மர்ம நபர்கள் வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிடுகின்றனர். இதனால் செவிலியர்கள் பீதி அடைகின்றனர்.
இதுகுறித்து, செவிலியர்கள் கூறியதாவது:
சென்னை பல் மருத்துவமனை உட்பட ஒருசில மருத்துவமனைகளில், இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
ஆடையை மாற்ற அறையின் உள்ளே சென்ற சில நிமிடங்களில், கதவின் வெளிப்புறத்தில் தாழ்ப்பாள் போட்டு விட்டு செல்கின்றனர்.
இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் அளித்தாலும், உரிய விசாரணை நடத்தமல், பார்த்துக்கலாம் என்ற ரீதியில் அலட்சியப்படுத்துகின்றனர்.
இதுபோன்ற சூழலில், மொபைல் போனிலும், நெட்வொர்க் கிடைப்பதில்லை. நாங்கள் சத்தம் போடும் நேரத்தில் யாரும் வரவில்லை என்றால், என்ன நடக்கும் என்றும் எங்களுக்கு தெரியவில்லை. யாராவது உள்ளே இருந்தாலும் எங்களால் என்ன செய்ய முடியும் என தெரியவில்லை.
மருத்துவமனைகளில் பெரும்பாலான இடங்களில் உள்ள, 'சிசிடிவி' கேமரா வேலை செய்கிறதா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அமைச்சர் தலையிட்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும், புகாரின் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.