மத்திய அரசை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்


ஓசூர்:தமிழகத்திற்கு, 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு தர வேண்டிய, 4,034 கோடி நிதியை வழங்காத, மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, ஓசூர் மத்திகிரி பஸ் ஸ்டாண்டில், மாநகர தி.மு.க., சார்பில், நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர செயலாளர் மேயர் சத்யா முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்து பேசினார். மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், உறுதிமொழி எடுத்து கொண்டனர். துணை மேயர் ஆனந்தய்யா, வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, ஆதிதிராவிடர் அணி மாவட்ட அமைப்பாளர் முனிராஜ், பகுதி செயலாளர் திம்மராஜ், மாநகர அவைத்
தலைவர் செந்தில், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல், பாகலுார் பஸ் ஸ்டாண்ட், வேப்பனஹள்ளி காந்தி சிலை, பேரிகை தபால் அலுவலகம், ராயக்கோட்டை, சூளகிரி, கெலமங்கலத்தில் இந்தியன் வங்கி, நாச்சிகுப்பம் கூட்ரோடு, தளி தபால் அலுவலகம், அஞ்செட்டி பஸ் ஸ்டாண்ட் என, 9 இடங்களில், அந்தந்த பகுதி தி.மு.க., நிர்வாகிகள் தலைமையில், மத்திய அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தது.
*கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட, போச்சம்பள்ளி, அரசம்பட்டி, காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, பாளேகுளி, மத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மத்தூர், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில், தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
*தர்மபுரி கிழக்கு மாவட்ட, தி.மு.க சார்பில், நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லம்பள்ளி பஸ் ஸ்டாண்டில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் சண்முகம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கவுதம், மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி, சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர்
இளையசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
*கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகம் முன் தி.மு.க., ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் மூன்றம்பட்டி குமரேசன் தலைமையில், பா.ஜ., அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
* கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க., சார்பில் 24 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகிலும், குருபரப்பள்ளி மேம்பாலம் அருகிலும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார். இதில், கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
அதேபோல மாதேப்பட்டி, துடுக்கனஹள்ளி, காவேரிப்பட்டணம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, அரசம்பட்டி உள்ளிட்ட, 24 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement