மீட்பு பணிகளுக்கு உதவ தற்காலிக போர் நிறுத்தம்: மியான்மர் ராணுவ அரசு அறிவிப்பு

1

நய்பிடாவ்: மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து, மீட்பு பணிகளுக்கு உதவ, ஆயுத குழுக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துவதாக ராணுவ அரசு அறிவித்துள்ளது.

மியான்மரில் பல ஆண்டுகளில் மிக மோசமான இயற்கை பேரழிவு தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 2,700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மியான்மரில் ராணுவ அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே கடும் மோதல்கள் நடந்து வருகின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையிலும் கிளர்ச்சியாளர்கள் மீது விமானத்தில் சென்று குண்டு வீசி தாக்குவதை மியான்மர் ராணுவம் நிறுத்தவில்லை.
இது சர்வதேச அளவில் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. மியான்மர் ராணுவ அரசுக்கு ஐ.நா., சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக மியான்மர் அரசு அறிவித்துள்ளது. ஏப்ரல் 22 வரை இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Advertisement