'முடா' வழக்கில் முதல்வர் விடுவிப்பை எதிர்த்து... அப்பீல்! மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் அமலாக்க துறை மனு

பெங்களூரு: 'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையா குற்றமற்றவர் என்று, லோக் ஆயுக்தா தாக்கல் செய்த, 'பி' அறிக்கையை ரத்து செய்யும்படி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், அமலாக்க துறை அப்பீல் மனு செய்து உள்ளது. இன்னொரு பக்கம், 'முடா' வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்த, உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உள்ளது. இதன்மூலம் நேற்று ஒரே நாளில் சித்தராமையாவுக்கு, இரட்டை அடி விழுந்து உள்ளது.
'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், தன் மனைவி பார்வதிக்கு 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, சித்தராமையா, பார்வதி, இவரின் சகோதரர் மல்லிகார்ஜுன் சாமி, நில உரிமையாளர் தேவராஜ் மீது மைசூரு லோக் ஆயுக்தா வழக்கு பதிவு செய்தது.
கடந்த பிப்ரவரி 20ம் தேதி நீதிமன்றத்தில், லோக் ஆயுக்தா விசாரணை அறிக்கை தாக்கல் செய்தது. 'சித்தராமையா, பார்வதி உட்பட நான்கு பேரும் குற்றமற்றவர்கள்' என்று, 'பி' அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
முதல்வர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற கோரிய சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணாவின் மனுவை, உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால் முடா வழக்கில் இருந்து சித்தராமையாவுக்கு பெரிய நிம்மதி கிடைத்தது. அவர் எளிதில் தப்பி விடுவார் என்று பேசப்பட்டது.
8 பக்க மனு
ஆனால் அமலாக்கத்துறை, முதல்வருக்கு ஷாக் கொடுத்து உள்ளது. லோக் ஆயுக்தா தாக்கல் செய்த பி அறிக்கையை ரத்து செய்யும்படி, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் நேற்று எட்டு பக்க ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
மனுவில் கூறியிருப்பதாவது:
முடா முறைகேட்டில் சித்தராமையா, அவரது குடும்பத்தினர் ஈடுபட்டதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
எங்கள் விசாரணையில் அவர்கள் முறைகேடு செய்தது நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால் லோக் ஆயுக்தா அவர்கள் தவறு செய்யவில்லை என்று பி அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.
நாங்கள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணை தொடர்பாக சில தகவல்களை, லோக் ஆயுக்தாவிடம் கொடுத்தோம். ஆனால் அவர்கள் அதை கருத்தில் எடுத்து கொள்ளவில்லை.
முடாவில், முதல்வர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது பற்றி அளிக்கப்பட்ட தனியார் புகாரில், முதல்வரிடம் விசாரிக்க கவர்னர் அனுமதி அளித்து உள்ளார். இதை உயர் நீதிமன்றமும் உறுதி செய்து உள்ளது. இதுதொடர்பாக நாங்கள் அளித்த ஆவணங்களை லோக் ஆயுக்தா கவனத்தில் எடுக்கவில்லை.
குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களிடம் முறையான விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, முடா வழக்கில் இன்னொரு முன்னேற்றமும் ஏற்பட்டு உள்ளது. முடா முறைகேடு தொடர்பாக முன்னாள் கமிஷனர் நடேஷிடம், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
அவரது வீட்டில் இருந்து சில ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடேஷிடம், அமலாக்கத்துறை பெற்ற வாக்குமூலம் செல்லாது என்று அறிவித்தது.
மீண்டும் சிக்கல்
இந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு, முடா வழக்கில் சித்தராமையா மனைவி பார்வதி, நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராக, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்து, நீதிபதி நாகபிரசன்னா உத்தரவு பிறப்பித்தார். நடேஷிடம் வாக்குமூலம் பெற்றது செல்லாது என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அருண் ஆகியோர், நடேஷிடம் விசாரணை நடத்த அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டனர். நடேஷ் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்ட நபர்களிடமும் விசாரணை நடத்த அனுமதி கிடைத்து உள்ளது.
இதனால் சித்தராமையாவிடம், அமலாக்கத்துறை விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளது.
இது அவருக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
-
ஓய்வு கிடைப்பதால் பீட் ஆபீசர்கள் நிம்மதி! ஷிப்ட் அடிப்படையில் போலீசாருக்கு பணி
-
செம்மொழி பூங்காவுக்குள் என்ன நடக்குது; நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு
-
வாகனம் செல்வதில் பிரச்னை; பெண்ணை கொடூரமாக தாக்கிய நபர்
-
கொங்குநாடு மருத்துவமனையில் சிறப்பு சலுகையில் அறுவை சிகிச்சை
-
சி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரி ஆண்டு விளையாட்டு விழா